நினைப்பும் நடிப்பும் இயல்-18 கெட்ட மதியினர், கீழ்மதி கொண்டனர்; திட்ட மிட்டனர் யூசுபைத் தீர்த்திட வட்டமிட்டனர் வழிமுறை ஆய்ந்தனர்; திட்ட வட்டமாய்ச் செயல்படத் துணிந்தனர்! தம்பியின் நன்மையே தம்முடை நன்மையாய் நம்புதல் போலவே நடத்திட முனைந்தனர்; வெம்பகை மறைத்தனர் வெறுத்திடும் யாக்கூபு தம்பகை வென்றிடத் தம்பியைப் புகழ்ந்தனர்! மிக்கநல் லன்புடன் மேன்மையாய் யூசுபைப் பக்கமே பார்த்திடில் பல்லினைக் காட்டுவர்! துக்கமாய் யூசுபு சோர்ந்திடக் கண்டிடில் அக்கறை கொண்டவர்க் காறுதல் கூறுவர்! விந்தையில் விந்தையாய் வெறுப்பினை மறைத்தவர் சந்ததம் யூசுபைத் தழுவியே மகிழ்ந்தனர். மைந்தரின் செய்கையில் மாறுதல் கண்டதும் சிந்தையில் யாக்கூபு திடுக்கமே கொண்டனர்! எவ்விதக் களங்கமும் ஏற்றிடார் போன்றவர் செவ்வையர் யூசுபைச் சேர்த்துற வாடினர். இவ்விதம் நேசமாய் இணைந்துதம் தந்தையைக் கவ்விய ஐயமே கடிதினில் களைந்தனர்! |