சுலைகாவின் துயரம் இயல்-19 தேய்ந்திடும் நினைவால் வாடிடும் மதியைச் சூழ்ந்திடும் தாரகை போன்று பாய்ந்திடும் உணர்வால் பதறிடும் சுலைகா படுக்கையைச் சூழ்ந்த தோழியர்கள் காய்ந்திடும் சுலைகா கருவிழி நோக்கிக் கடுந்துய ரொடுகொடுஞ் சினமும் தோய்ந்திடக் கண்டு பெருந்திகில் கொண்டு தோழியர் மௌனமாய் நடந்தார். சுந்தர வதனம் சுருங்கிட, நுதலில் துன்பத்தின் கோடுகள் நெளியச் சந்திர முகத்தில் சுடுங்கனல் பறக்கத் தாதிகள் நோக்கிய சுலைகா "என்றனை மீண்டும் நெருங்கினீர் என்றால் என்னதான் நடக்குமோ அறியேன்! சொந்தஎன் வழியில் குறுக்கிட யாரும் துணிந்திடில் துயர்மிகும்" என்றாள். மன்னவர் தைமூஸ் திருமகள் சுலைகா வார்த்தையைத் தோழியர் கேட்டே இன்னமும் இதனை அரசர்க்கு இயம்பா திருப்பது தவறெனத் தேர்ந்து சென்றனர் நேரே வேந்தரின் சமூகம். சுலைகாவோ, தனிமையை வரித்து நின்றனள் அங்கே கிழத்தாதி நுழைந்து நிலைத்துள அமைதியைக் கலைத்தாள். |