பக்கம் எண் :

77


"பெண்களின் வனப்பிற் குவமையாய் அமையும்

     பேரெழில் திரண்டொரு உருவாய்க்

கண்களைக் கவர்ந்து கருத்தினில் நிறைந்து

     காண்பவர் கேட்பவர் எவரும்

திண்ணமாய் மயங்கச் செய்திடும் உங்கள்

     சிந்தையைப் பிசைந்திடக் கனவில்

மன்னவர் எவர்தாம் வந்தனர்? மயக்கி

     மறைந்தவர் பெயரென்ன?" என்றாள்.

 

தன்னையே வளர்த்த கிழவியின் கேள்வி

     தடுத்திட இயலாத சுலைகா

"கண்களை நோக்கிக் கருத்தையும் கலக்கிக்

     கபடமாய் மயக்கிய அவனை

முன்னமே எங்கும் கண்டது மில்லை

     முதல்முறை யாகவே வந்தே

என்னிடம் தனது இருப்பிடம், பெயரை

     இயம்பாது சென்றனன்’ என்றாள்.

 

இருப்பிடம், பெயரோ அறியாத அவனுக்

     கேங்கியே நிற்பது முறையோ?

விருப்புடை யோனாய் வந்தவ னானால்

     மீண்டும் மீண்டும் வருவானே.

பொறுப்புடை யோனாய் வந்தவ னானால்

     புகுந்தபின் மறைந்திருப் பானா?

வெறுப்பதற் குரியோன் அவன்நினை வழிக்க

     வெகுவாக வேண்டினாள் கிழவி.

 

என்னிளம் நெஞ்சை இருப்பிட மாக

     ஏற்றபின் இன்னொரு இடத்தைத்

தன்னுடை இல்லம் என்றுரைப் பானோ?

      சாற்றிடில் அதுதவ றலவோ?