பக்கம் எண் :

98


யாக்கூபின் நிலை

  இயல்-23

 

"கண்ணின் மணியே, என்னுயிரே

     கருணை பொழியும் விண்ணமுதே,

பொன்னின் ஒளியே, புத்துணர்வே

     பொங்கச் செய்யும் என் மகனே!

உன்னைப் பிரியும் முன்னாலென்

     உயிரைப் பிரிந்தால் ஒருதுயரும்

என்னை வருத்தா திருந்திடுமே

     எவ்வா றுன்னை மறந்திடுவேன்?

 

அள்ளி அணைக்கும் காலத்தே

     அன்னை இழந்தும் உயிர் வாழ்ந்தாய்,

பள்ளிக் கனுப்பும் பருவத்தே

     பக்கத் திருந்தே உனைக்காத்தேன்,

துள்ளித் திரியும் பகைஓநாய்

     சூழ்ந்து நிற்பதை அறியாமல்

செல்வேன் அடவிக் கெனச்சென்று

     திரும்பாச் சுவர்க்கம் சேர்ந்தாயோ?

 

அன்பே நிறையும் நின்முகத்தை

     அழகே மிகுந்த பொன்னுடலைக்

கண்டே இரக்க மில்லாமல்

     கடிக்கத் துணிந்தது ஓநாயோ?

பண்பே அறியாக் கொலைஞர்களும்

     பார்த்தால் பாதம் பணிவாரே.

கண்ணே யூசுப் உன்னுயிரைக்

     காலனும் கவரத் தயங்குவனே!