பக்கம் எண் :

99


தைமூஸ் சபையில் அறிவித்தல்

இயல்-24

 

ஆற்றலில் சிறந்த அமைச்சரே! அவையில்

வீற்றிருக்கின்ற வித்தகப் பெரியீர்!  

போற்றுதற் குரிய புலவரே! நாட்டின்

நாற்றிசை காக்கும் நாற்படைத் தலைவ!

சாற்றுதல் கேளீர். சாற்றுதல் கேளீர்.

தோற்றமும் கருத்தைத் துணிவுடன் கூறீர்!

எத்தனை உரைத்தும் என்மகள் சுலைகா  

அத்தனை மறந்து கனவிலே கண்ட

பித்தனை நினைத்தே பெருந்துயர் பூண்டாள்!

இத்துணைக் காலம் என்னால் இயன்றதை

எடுத்துச் சொல்லியும் ஏற்றிட வில்லை.

அடுத்தேன் உங்களை அவள்துய ரகற்றக்

கூடிய யோசனை கூறுவீர் என்று"

வாடிய தைமூஸ் வருந்தியே கேட்டார்.

"சூடிடும் மலரைச் செடியினில் விட்டால்

வாடியே உதிரும். வாலிபம் இதுதான்!

கூடிய விரைவில் குலக்கொடி தழுவத்

தேடிடும் கொம்பைத் தேர்ந்திட முயல்வோம்"

என்றான் கவிஞன், இவ்வுரை கேட்டு

"நன்றே" என்றே நவின்றான் தளபதி!