பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்111


2. ஒளி பெறல் காண்டம்

1. நபிப்பட்டம் பெற்ற படலம்

புதுமை ஒளி ஒன்று வந்தது

வாய்மையொடும் அன்புநலம் மிகுந்த வர்கள்

வளர்க்கின்ற குறைசிஎனும் குலத்துச் செம்மல்

தூய்மையொடு திகழ்கின்ற முப்பத் தெட்டுத்

தொடராண்டு நிறைவுற்ற பருவத் தாராய்த்

தாய்மனத்துக் கடவுளவன் தகைமை எண்ணித்

தம்மனத்தை நேர்நிறுத்தி வாழும் நாளில்

சேய்மைஒளி ஒன்றவரை நோக்கி நோக்கிச்

செல்வதுமாய் மறைவதுமாய்ப் பொலியக் கண்டார். 1

யாவும் இறைவனின் செயலே!

பார்த்தஒளி அழகியதாய் இருந்த போதும்

பார்க்கஅடிக் கடிவருதல் ஏனோ? என்று

சீர்த்தகைமை உடையவரும் சிந்தை செய்து

சின்னேரம் அச்சமுற்றும் சில நேரத்தில்

ஆர்த்தமனம் உடையவராய் ஆர்வ முற்றும்

அவ்வொளியின் நிலைஆய்ந்தும் யாவும் தம்மை

ஈர்த்தநிலை இறைவன்தன் செயலாம் என்றே

எண்ணினராய் அச்சமற்றே இயங்குங் காலை; 2