பக்கம் எண் :

142துரை-மாலிறையன்

3. உமறு நன்னெறி உணர்ந்த படலம்

இசுலாம் நெறி வளர்ந்தது

வானவர் தலைவர் தோன்றி வழங்கிய நபியார் பட்டம்
தீனெனும் இசுலாம் கொள்கை தெரிவிக்கும் கலிமா சட்டம்
ஆனவை அனைத்தும் தந்தே ஆயின ஐந்தாம் ஆண்டே
வானிறை ஆணையாலே வளர்ந்ததாம் இசுலாம் தீனே! 1

இரவில் நபிகள் நாயகம் தொழுதார்

ஒன்றிய உளமும் அன்பை உணர்த்திடும் செயலும் கொண்டு
நன்றியல் இறைவன் தன்னை நாடிய வண்ணம் வாழ்ந்து
நன்றிசொல் கின்ற அண்ணல் நபியவர் தனித்திருந்து
வென்றியை விளைக்குமாறு வேண்டும்ஓர் இராக்காலத்தில்; 2

உமறுவையோ, அபூசகுலையோ மனம் மாற்றுக

“ஆண்டவா! உலகில் நின்றன் அரியதீன் நெறியே வெல்ல
மாண்தனி உமறு தாமோ மற்றவர் அபூச கீலோ
நீண்ட நம் அரும்பணிக்கு நேர்வந்தே உதவச் செய்தல்
வேண்டு” மென்(று) அண்ணல்கோமான் வேண்டினார் விருப்பினாலே! 3

அபூசகுல் நபிகளை மாய்க்க அலைந்தான்

இறைவனை நபிகள் வேண்ட இறைஒளி உலகைத் தூண்டக்
கறைமன அபூசகுல்தான் கத்தியும் கையுமாக
மறைவள மனத்தினாரை மாய்க்கவே வேண்டுமென்று
முறையிட உமறும் மற்ற முதுவீரர் களையும் கூட்டி; 4

“முகம்மதுவை அழிப்போம் வாரீர்” என்றான்

“மக்கமா நகருக் கீடாய் மண்ணிலோர் நகரம் இல்லை
மக்கமா மக்கள் தம்போல் மக்களும் வையத் தில்லை
சிக்கல் இல்லாமல் வாழ்ந்தோம் சிறுமையே செய்வதற்கு
மக்காவில் தோன்றி உள்ளான் மகம்மது பேர் கொண்டானே! 5