பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்147


ஊழிக்காலம் வந்தாலும் வெல்ல முடியாது

ஊழிநாள் வரை ஆனாலும் ஒட்டிவந் திம்மாட்டை நாம்
வீழச் செய் திடல் ஆகாது வெல்லுதல் குதிரைக் கொம்பென்(று)
ஆழவே சிந்தித்தாரே அரியராம் உமறு வல்லார்
வாழ்விலே இதுபோல் நாம்ஓர் மாட்டின்முன் மாட்டிக் கொண்டோம்; 29

தம் வீரத்தைப் பழித்து உமறு விலகினார்

என்னடா நம்கை வீரம்? என்றவர் தம் நெஞ்சாலே
எண்ணமே இட்டாராக இதயமே நகைத்தாரானார்
வண்ணமாய் நம் ஊருக்குள் வாழுவார்க்கு இதைச் சொல்வோமே
என்னும் ஓர் கருத்துள்ளாராய் ஏகினார் உமறுதாமே; 30

மாடு மறைந்தது உமறு துவண்டார்

வீரரை வெளிறச் செய்த விண்ணவன் காளை ஆற்றல்
போரினைக் கைவிட் டாங்கே பொறுமையின் உருவமாகி
ஆருமே காணா முன்னம் அகன்றதும் உமறு வாடும்
கீரையின் தண்டுபோலக் கிளர்மனம் துவண்டு போனார். 31

வெற்றியா? தோல்வியா? என்று கேட்டனர்

வெற்றியை நோக்கி நோக்கி வீரர்கள் காத்திருந்தார்
நெற்றியைச் சுருக்கிக் கொண்டே நேர்வந்த பேரைக் கண்டார்
“வற்றிய நாவினோடு வந்துள்ள உமறு வீர!
உற்றதும் என்ன?” வென்றே உறவினர் கேட்டார் ஆங்கே; 32

அதைச் சொல்லத் தானே வந்தேன்

தமக்குமுன் காளை ஒன்று தடுத்ததும்; தடுத்த தன்னை
அமர்க்குமுன் வெல்க என்றே அறைந்ததும் நம்பி யானும்
இமைக்கும்முன் வெல்ல எண்ணி எதிர்த்து அடங்கியதும் ஈங்கே
உமக்குமுன் சொல்லத்தானே ஓடோடி வந்தேன்” என்றார். 33

மாடாக வந்தது எவரோ?

மாடெனும் உருவம் தாங்கி மண்ணினில் வந்த தாரோ?
நீடுலாம் வானத்தார்தாம் நெடிய இவ்வுருப் பெற்றாரோ?
காடுலாம் அரிமா அந்தக் காளையாய் வந்ததாமோ?
ஈடிலா வீரம் காளை எய்தியது எங்ஙன் சொல்வேன்? 34