ஏழுநாள்கள் கழிந்தன
அன்னை பரிவுப் பால் ஊட்ட அருவான் உலகோர் ஒளியூட்ட
முன்னே வான மடவார்கள் முயன்று மகிழ்ந்து தாலாட்ட
தன்னே ரில்லாத் தகுநபியார் தாயை உலகம் பாராட்ட
நன்னா ஏழு பொன்னாள்கள் நகர்ந்து சென்று கழிந்தனவே! 93
முடிநீக்கும் சடங்கு செய்தார்கள்
ஆறும் ஒன்றும் நாள்ஆக அரியோர் பிறப்பைப் பாராட்டும்
பேறு பெற்ற பெருமுதியார் பிழையில் அப்துல் முத்தலிப்பு
கூறும் சிறப்பு விருந்தொன்றைக் கூட்டி வைத்து மான்மதமே
நாறும் சேய்க்கும் முடிநீக்கும் நல்ல சடங்கும் முடித்தார்கள். 94
முகம்மது என்று பேரிட்டு அழைத்தனர்
மீண்டும் பேசக் கற்றவர்போல் மேன்மை அப்துல் முத்தலிப்பு
தூண்டும் இறைவன் செயலாலே தூயர் தம்மைத் தூக்கி நலம்
வேண்டி வேண்டி இறைஇல்லம் விரைந்து சென்று தொழுதவர்கள்;
நீண்ட புகழ்கொள் “முகம்மது” எனும் நெடும்பேரிட்டே அழைத்தார்கள். 95
புகழப்பட்டார் தோன்றினார்
தோன்றும் போதே புகழெல்லாம் தோன்றச்செய்த முகம்மதுவை
ஊன்று கோலாய் நிலத்தார்க்கே உதவ வந்த முகம்மதுவை
ஈன்ற தாயின் பெருமை சொல ஈங்கே வந்த முகம்மதுவைத்
தோன்றல் பெருமான் தூக்கிவந்து தூயதாய்கை அளித்தாரே! 96
அன்னைக்கு அடுத்துப் பாலூட்டியவர்
அண்ண லாரின் பெருந்தந்தை அபூல கபுதம் அடிமைஎனும்
பெண்ணாம் அசரத்துவைபாவே பெற்றதாய்க்குப் பின்பன்னாள்
கண்ணைப் போலப் பாராட்டிக் கனிவாய்த் தாய்ப்பால் தானூட்டி
அண்ணலாரை வளர்த்திருந்த அரும்பேறு உற்றுச் சிறந்தாரே! 97
***
|