மக்கள் இளைத்தனர்
ஒட்டிய வயிறும் காலும் ஒடுங்கிய முதுகும் கையோ
தட்டிய தகடு போலத் தங்கியே தோளில் தொங்கக்
கட்டிய எலும்புக் கூட்டில் கண்களோபெரிய தாக
ஒட்டகக் குட்டியைப் போல் உருவத்தால் இருந்தார் மக்கள். 6
வலசை போன மக்கள்
இறந்தவர் இறந்தோர் ஆக இருப்பவர் ஊரை விட்டுப்
பறந்தபுள் கூட்டம் போலப் பக்கத்துள் இருக்கும் ஊர்க்கும்
பறந்தனர் உணவைத் தேடிப் பதைத்தநற் பாவை மார்கள்
சிறந்தவர் சில்லோர் மக்காச் செம்மையூர் நாடிப் போனார்; 7
பெண்கள் சிலர் மக்காவை அடைந்தனர்
போனவர் பலருள் சில்லோர் புரண்டனர் துவண்டு வீழ்ந்தார்
ஏனையோர் சிலருள் இல்லோர் இருண்ட கண்ணோடு சாய்ந்தார்;
வானையே நோக்கி நோக்கி வணங்கியே வந்த பெண்கள்
மானமே உயிராய்க் கொண்டு மக்காவை நெருங்கிப் போனார்; 8
மக்காவின் தெருவில் குனைன் சிற்றூர்ப் பெண்கள்
மக்கமா நகரில் உள்ள மணித் தெரு வெல்லாம் சென்று
தக்கமா நகரத் தீரே! தவிகுனைன் சிற்றூர்ப் பெண்கள்
மிக்க தாம் வறுமை யாலே விழைபணி தேடி வந்தோம்
மக்களைப் பெற்ற தாயர் மனங்கொளக் கேட்பீர்” என்றார். 9
நாங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ப்போம்
வீரமும் தாய்ப்பா லோடு விழைந்தூட்டி வளர்ப்போம் நெஞ்சில்
ஈரமும் ஈகைப் பண்பும் இயைந்திடும் வண்ணம் காப்போம்;
சீருடன் சிறப்பும் சேர்த்துச் சேய்களை வளர்த்து மீள்வோம்
ஆராரோ பாட்டுப் பாடி ஆர்வமாய்த் தூங்க வைப்போம்; 10
|