3. புலம் பெயர் காண்டம்
1. மதீனா மக்கள் மனம் மாறிய படலம்
எதிர்த்தனர் சிலர்; வாழ்த்தினர் சிலர்
கள்ளம் இல்லா மக்காவில் கனிந்த இசுலாம் நெறிகண்டு
வெள்ளப் பெருக்கின் நீர்ப்பரப்பில் விளையும் சுழலும் அமைதியும்போல்
உள்ளம் ஒன்றி வாழ்த்துநரும் ஒழிக்க எண்ணும் மனத்தினரும்
வள்ளல் நபியார் அருள்கொண்டு வாழ்ந்த அந்த நாளினிலே; 1
மக்காவில் நடக்கும் ‘ஹஜ்’ விழாவுக்கு மக்கள் கூடினர்
புவியோர் போற்றும் புனிதவிழா புகழால் உயர்ந்த கச்சு விழா
குவியும் மக்கள் கூட்டத்தின் கொள்கை உயர்த்தும் இணக்கவிழா
நவில்சீர் மக்கா நன்னகரில் நடக்க இருக்கும் நன்னாளில்
செவிகண் வாய்மெய் மூச்சுணர்வால் செம்மை உடையோர் கூடினரே! 2
பல்வேறு திசைமக்கள் வந்து கூடினர்
நான்கு திசையின் மக்களொடு நல்ல மதினா மாந்தர்களும்
தேன்கூ டதனை நாடிவரும் தேனீக்கள்போல் மொய்த்திடவே
வான்சீர் பெற்ற பெருமானார் வள்ளல் நபியார் பேரருளால்
கான்சூழ் மலைநீர் வழிகடந்து கடமை எண்ணி விரைந்தார்கள்; 3
அசுஅதுவும் நண்பர் பன்னிருவரும் மக்கா வந்தனர்
குழுமி வந்த மதீனத்தார் கூட்டத் தாருள் அசுஅதெனும்
வழுவில் மாந்தர் ஒரு நல்லார் வள்ளல் நபியார் வான்பெருமை
முழுதும் அறியும் ஆர்வத்தால் முனையும் நண்பர் பன்னிரண்டு
விழுமி யோரும் உடன்சூழ விரைந்து சென்றார் அந்நாளே! 4
|