பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்387


ஆ! ஆ! என்ன அழகு

செந்தா மரையின் முகந்தானோ? செழுந்தேன் பொழியும் மலைதானோ?
வந்தோர் முல்லை மலர்க்கொத்தோ? வான கத்தார் தம் சொத்தோ?
நந்தா விளக்கோ? என எண்ணி நறுந்தா மரையின் முகத்தண்ணல்
சிந்தா நின்றார் புன்சிரிப்பே சிறப்பாய்ப் பின்னர் இதுசொன்னார்; 46

என்ன சொல்லிப் புகழ்வேன்?

பொன்னே எனநான் போற்றுவனோ? புதுநாள் மலரோ என்குவனோ?
முன்னே வந்த முழுநிலவோ? முகமோ அன்றி முத்தொளியோ
என்னே என்னே இவ்வெழிலை எவ்வா றியம்பி மகிழ்வனெனத்
தன்னே ரில்லாப் பெண்ணொளி்யைத் தமிழ்போல் மொழியால் வாழ்த்தியபின்;47

தொகை தந்து உன்னை மணப்பேன் விருப்பமா?

தொகையைத் தருவேன் விடுதலைநீ தோகைபெற்றால் அதன்பின்னர்ப்
புகைசூழ் இடமே போய்விட்டால் புதுமெய் ஒளியின் புகழ்குன்றும்
பகைசூழ்ந் திருந்தாய் என்றாலும் பழியே நீங்கி வந்துள்ள
தகையோய் நின்னை மணந்திடுவேன் தருவாய்கருத்தை” எனச் சொன்னார்.48

கைப்பற்றினார் முகம்மது

சற்றும் எதிர்பா ராமுறையில் சாற்றக் கேட்ட பாவையினார்
முற்றும் கனிந்த முறைஆய்ந்து முழுதும் இசைந்து “நல்லிசையோய்!
பற்றற் றுந்தம் பற்றினையே பற்றுக் கோடாய்ப் பற்றுகிறேன்
பற்று” கென்றே பணிந்தவள்கைப் பற்றினார்நற் றுணைநபியே! 49

***