பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்389


வீரம் உண்டு கனைத்தெழ வில்லையே!

ஈட்டியும் வாளும் மற்ற எண்ணற்ற படையும் உண்டு
தீட்டிய கூர்வாள் உண்டு தேறிய மெய்யும் நெஞ்சுள்
மூட்டிய பகையும் உண்டு முன்னர்நாம் போரில் செய்து
காட்டிய வீரம் உண்டு கனைத்தெழ வில்லையேநாம்! 6

உணர்வு இருந்தும் பாழ் ஆனது

வெட்கமும் இல்லை நெஞ்சில் வேதனை படவும் இல்லை
மட்கிய மரத்தைப் போல மனத்திலே வலிமை கெட்டோம்
வெட்சிப்போர் விளைப்பதற்கும் வீரத்தை மறந்து விட்டோம்
உட்சிவந் திடவில்லையேல் உணர்வெலாம் இருந்தும் பாழே! 7

வாழ்க்கை விரிவதில்லை

அரியராம் நமது வீரர் அபூசகுல் மாண்ட போதும்
உரியதாம் வீரம் கெட்டும் உணர்வதும் அற்றுப் போனோம்
பெரியராம் ககுபு தம்மைப் பிரிந்தும் நாம் கொதிக்கவில்லை
விரிவதாம் வாழ்க்கை என்றே வினைகெட்டு வாழுகின்றோம். 8

வீரர்களே! கொதித்தெழுக

‘“அடங்கியே கிடப்பதா? நாம் ஆமையாய் வாழ்வதா? கை
முடங்கியே நலிவதா?வாய் முனகியே அழிவதா? மெய்
ஒடுங்கியே நடப்பதா? உள் உணர்வினை இழப்பதா? செம்
மடங்கல்நாம் அல்லவா? நும் மறம்படர்ந் தெழுக” என்றான். 9

நமக்குத் தொல்லை தருகின்றான்

எழுகவே யூத மக்காள்! இனியும் நாம் பொறுக்க வேண்டா
பொழுதெலாம் தீமை செய்யும் போக்கிலே நிலைத்து விட்டான்
பழுதெலாம் நிறைந்த நெஞ்சன் பகைவனாம் முகம்மதென்போன்
தொழுதலால் நம்மை எல்லாம் தொல்லைஉட் படுத்து வானே! 10

மக்காவை நாடிப் போனான்

இவ்வகை மொழிகள் பேசி எலாரையும் உசுப்பி விட்டே
பொய்வகை உளமே கொண்ட புகழிலான் குயைநன்மைகள்
செய்வகை ஆய்ந்து காணும் செம்மையார் நட்பிழந்த
ஐவகை நிலம்சூழ் மக்கா அதனையே நாடிச் சென்றான். 11