4. இறுதிப்போர் புரிந்த படலம்
போர்முழக்கம் செய்தார் அண்ணலார்
இனியும் காலம் கடத்துவதோ இமியும் ஆகா தெனஎண்ணிக்
கனியும் அன்பு நெஞ்சத்தார் கலந்து பேசி வீரர்களைப்
பனியும் வெயிலும் கருதாமல் பகையை நொறுக்க எழுவிரென
நனிஆர் வத்தால் இயம்பிடவே நல்லோர் முழங்கி ஆர்த்தார்கள்; 1
போர்ப்படை சவரான் குன்றம் அடைந்தது
எவரை எதிர்க்கப் போவதென எவரும் அறியா தொருநாளில்
தவறா வெற்றி தான்அடைய தகுபோர் செய்ய அண்ணலுடன்
உவகை கொண்ட மறவர்கள் ஒருபத் தாயிரம்பேர்கள்
சவரான் என்னும் குன்றடைந்து தங்கி இருந்தார் அவ்விரவே! 2
மலையில் பரந்து இருங்கள்
தோழர் மாரே! இங்கிருந்து தோன்றும் மக்கா கண்டிடலாம்
ஆழ அன்பு கொண்டவர்நீர் அல்லா மீதில் யானறிவேன்;
வீழப் போவார் நம் பகைவர் வெற்றி முன்னே தெரிகிறது;
சூழ ஒன்று சேராமல் தொலைவில் தொலைவில் தங்குங்கள். 3
தனித்தனியாக அடுப்பு மூட்டுங்கள்
மலையில் எங்கும் ஆங்காங்கே மண்டும் அடுப்பை மூட்டுங்கள்;
தொலைவில் உள்ளார் காணுகையில் தோன்றும் குன்றம் எரிவதுபோல்
குலைவார் பகைவர் குன்றமெலாம் கூடி எரிதல் போல் கண்டு
நிலையில் திரிந்து தடுமாறி நெருங்க அஞ்சித் தயங்கிடுவார்; 4
மலையே எரிகிறதோ? என நடுங்கினர்
கோமான் சொன்ன கொள்கைவழி குன்றம் முழுதும் அடுப்பெரிய
ஆம்ஆம் ஐயா அம்மலைதான் அதிர மறவர் சூழ்ந்துள்ளார்
போம்ஆ றொன்று நமக்கில்லை பொல்லா நேரம் வந்ததெனச்
சாமா றுள்ளம் கலங்கியவர் தாமே விழித்தார் குறைசியரே! 5
|