பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்449


குறைசியரின் மனம் கொள்ளக் கூறினார்

விடைபெற் றவரும் மக்காபோய் விலகி இருந்த குறைசியர்பால்
நடைபெற் றதனை முழுவதுமாய் நயமாய் நவின்றார்; அல்லாவின்
கொடைபெற் றதனை முகம்மதுவின் கொள்கை யதனைக் குணநலனை
இடையிட் டிடாமல் எடுத்தியம்பி இதயம் கவரும் அப்பொழுதில்; 30

மனைவி “இந்த்” கணவனை வைதாள்

தேள்கொட் டியது போல் அவர்தம் திகழ்மனையாட்டி “இந்த்” என்பாள்
தோள்மட் டுமிலை தளர்ந்ததிவன் தூய அறிவும் தளர்ந்ததென்றும்
ஆள்மட் டமென ஆயினன் என்(று) அடிமட்டமெனும் கருத்துரையால்
வாள்வெட் டெனவே சொல்பேசி வருத்திட் டனளே; அதுகாலை; 31

எல்லாரும் அல்லாவைப் புகழ்ந்தனர்

நல்லார் அன்பு வல்லாரும் நடத்திச் சென்ற படையோரும்
மல்லார் திண்டோள் குறைசியர்கள் வாழும் மக்கா நகர்சூழ்ந்தும்
அல்லா அல்லா எனஇறைவன் அரும்பேர் தன்னைப் புகழ்ந்துரைத்தும்
செல்லா நின்றார் அந்நிலையில் சீற்றம் கொண்டார் குறைசியரே! 32

குறைசியர் போர் செய்யவே வந்தனர்

“குருதிக் கறையே படியாமல் குறுக வேண்டும் இறையில்லுள்
பொருது போகும் எண்ணத்தைப் போக்கி விடுக” எனச் சொன்னார்
பெருகும் அன்புப் பெருமானார்; பேணா மக்கள் குறைசியரோ
கருகும் பகைநெஞ் சுடையவராய்க் களப்போர் புரிய முன்வந்தார். 33

குறைசியர் வலிமை குன்றினர்

போர்போர் என்று கொதித்தவர்கள் பொரமாட் டாமல் தளர்வெய்திக்
கூர்போர்ப் படைகள் தாமிழந்து கொடுமை செயவும் வலிவற்று
நீர்போம் வழிபுல் சாய்தல்போல் நிழல் காணாத வெயிலினர் போல்
ஆர்போர் செய்வார்? எனக்கூறி அஞ்சி அஞ்சி விலகினரே! 34

இறை இல்லத்தில் அண்ணலார்

தூய வெள்ளைக் கொடிநாட்டித் தோன்றல் தங்கள் வீரருடன்
நேயத் தோடும் இறைஇல்லம் நெருங்கிப் புனிதக் கல்தொட்டுப்
போய மர்ந்து ககுபாவைப் போற்றி ஏழு முறை சுற்றி
ஆய மகாமே இபுறாகீம் அரிய கல்லின் மேலமர்ந்தார். 35