6. கதீசா பிராட்டியார் கனவு கண்ட படலம்
ஈச்சமரச் சோலை புகுந்தார்
பீய்ச்சும் நச்சுப் பாம்பதனைப் பேசும் அன்புப் பாம்பாக்கி
வாய்ச்சொல் வாய்மை நன்னெறியார் வணிகர் குழுமம் வாழ்த்திவர
ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் உலகின் நலமே எண்ணுபவர்
ஈச்ச மரத்தின் சோலை எழில் எல்லாம் கண்டு நடந்தார்கள். 1
ஒரு மாளிகையை ஆங்கே கண்டார்
மணத்தைப் பரப்பித் தேன்நிரப்பும் மலர்கள் பொழிந்த சோலையினைக்
குணத்தின் மிக்கார் அடைந்தவுடன் குதிரை கழுதை ஒட்டகங்கள்
அனைத்தும் ஆங்கே இளைப்பாறி அமைதி கொண்டு செல்லுகையில்
மணத்தின் மேனி கொண்டவராம் மன்னர் கண்டார் மாளிகையே! 2
இசுறா எனும் முதியவர் இருந்தார்
மாட மாளிகையோ? அஃது மண்ணில் இருந்து விண்ணைத்தான்
தேட அமைத்த படிக்கட்டோ? தெளிவார் இல்லை அக்குடியில்
நீடும் புகழ்கொள் இசுறாவாம் நெடுநாள் வாழ்ந்த ஓர்முதியோர்
பீடும் மாண்பும் உடையவராய்ப் பிழையா வாழ்வு நடத்தி வந்தார்; 3
இசுறாவின் மாண்பு
நெஞ்சில் அன்பும் நிறைஅருளும் நீங்கா ஒழுக்க நெறிமாண்பும்
மிஞ்சும் கல்வி மேன்மைகளும் மேலோர் விரும்பும் பொறைதவமும்
வஞ்சமில்லா வாய்மையொடு வணக்க உரையும் இரக்கமதும்
வெஞ்சினத்தை விரும்பாத வினைநல் தூயன் இசுறாவே! 4
அல்லா அன்பருக்கு விருந்து வைப்போம்
அல்லா அன்பர் நல்லாரும் அவரைச் சார்ந்த பல்லாரும்
கல்லார் மலைகள் சோலைஎலாம் கடந்து களைத்து வருகின்றார்
புல்லார் வந்தால் அவர்க்கும்நாம் பொருந்து விருந்து வைத்திடுவோம்
நல்லார் இவர்க்கு நாம்போற்றி நல்க வேண்டும் விருந்தென்றே; 5
|