சினப்போர் புரிவது வழக்கம்
துணிச்சல் அவர்க்குத் துணையாகும்; தொடர்ந்துவெற்றி கண்டார்கள்
வணிகம் செய்யும் நெறியாளர் வாய்மை தவறா முறையாலே;
இணையில் லாத பண்புகளால் இவர்கள் நிறைவாய் இருந்தாலும்
அணையாச் சினத்தால் பகைமைப்போர் அவர்களுக்குள் செய்வார்கள். 27
எல்லா உருவமும் கடவுளே
கண்ட கண்ட உருவைஎலாம் கடவுளாகத் தொழுதார்கள்
பெண்டிர்பிள்ளை எல்லாரும் பெருமை இல்லார் என்றார்கள்
சண்டை ஒன்றேஅவர்செய்யும் சாத னையாய் வாழ்ந்தார்கள்
மண்டும் இவர்கள் நடுவில்தான் மக்கா நகரம் செழித்ததுவே! 28
குறைசிகுலத்து மாமனிதர்
சீர்திருத்தம் பலசெய்த செம்மல் அப்துல் முத்தலிப்பின்
ஆர்வத்தாலே வளர் புதல்வர் அப்துல்லாவைக் காப்பாற்ற
நேரில் நூறு ஒட்டகங்கள் நேர்ச்சி செய்தார் இறைவனுக்கே
ஆரும் போற்றும் குறைசிகுல அருமை பொலியத் தோன்றியவர்! 29
பரிவு உடையவர் அப்துல்லா
அன்பும் நாணும் ஒப்புரவும் அறிவும் வாய்மை ஒழுக்கமதும்
துன்பம் செய்யும் இயல்பினர்க்கும் தொடர்ந்து நன்மை செய்மனமும்
இன்பம் பயக்கும் வினைஒன்றே எல்லார் தமக்கும் செய்நலமும்
பண்பும் ஈகைக் கண்ணோட்டப் பரிவும் உடையார் அப்துல்லா; 30
மதினாவின் இயற்கைவளம்
சோலை எல்லாம் மலைச்சாரல் துளிகள் பட்டே செழித்துவிடும்
பாலை எல்லாம் ஒட்டகங்கள் பாதம் பட்டே குழிந்துவிடும்
கோல எழிலே கொண்டபெருங் கூட்ட மக்கள் நடக்கின்ற
சாலை கொண்ட மதினா ஊர் தாய்மை சிறந்த நல்லூராம் 31
விழாக்கள் நிறைந்த ஊர்
பூத்த பூக்கள் எலாம் அழகு பொருந்தக் காய்த்துக் கனியாகும்
மூத்த வர்கள் செய்தவத்தின் முறைமை யாலே சிறந்ததுவாம்
காத்த மரபுப் பெருமையுடன் கடவுள் வணங்கும் நெறியாளர்
ஆர்த்த விழாக்கள் பொலிகின்ற அழகுநகரம் மதினாவில்; 32
|