|
என
என்றபடி. ‘ஆயின், தண்ணீரின்
பரமாணுக்களில் நிறைந்து நிற்கும் இவ்வளவேயோ?’ என்னில், நிலம் விசும்பு ஒழிவறப் பரந்து
உளன். பூமியிலும் ஆகாயத்திலும் அவ்வாறே நிறைந்து நிற்கிறான். ஐம்பெரும் பூதங்களில் மூன்றனைக்
கூறியவதனால் ஏனை இரண்டனையும் உபலட்சணத்தாற்கொள்க. ஆக, ஐம்பெரும்பூதங்களாலும் அமைந்துள்ள
அண்டத்தை அருளிச்செய்தாராயிற்று.
இனி, அப்பூதங்களின்
காரியமான பொருள்களில் நிறைந்திருக்கும்படியை அருளிச்செய்கிறார் மேல்: கரந்த சில இடந்தொறும்
- இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றிலே முடியும்படியாக நுட்பமான சரீரந்தோறும். இடம் திகழ்
பொருள்தொறும் - அவ்வச் சரீரங்களில் ஞான ஆனந்தங்களோடு கூடி மிளிருகிற ஆத்துமா தோறும்.
கரந்து - தான் நிறைந்திருக்கும் பொருளுக்குத் தெரியாதவாறு மறைந்து, எங்கும் பரந்து உளன் - உயிரானது
உடலில் நிறையும்போது அவ்வுயிர் அவ்வுடலில் ஓரிடத்திலிருந்து ஞானத்தாலே எங்கும் நிறையக்கூடியதாய்
இருக்கும்; இறைவன், அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன். ‘ஆயின்,
எங்கும் நிறைந்திருத்தலை இறைவனுக்குக் கூறி, அணுவின் தன்மையினை உயிர்ப்பொருட்குக் கூறி, இவ்வுயிர்க்குள்
அவன் குறைவு அற நிறைந்திருப்பன் என்றால், அது கூடுமோ?’ என்னில், இவை உண்ட கரனே-‘சிறிய
வடிவினைக்கொண்டு பெரியவற்றை எல்லாம் தன் திருவயிற்றிலே வைத்தால், 1‘தயிர்
உண்ட பொன்வயிறு இவ்வேழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால்’ என்கிறபடியே, பின்னையும் அவ்வயிறே
இடமுடைத்தாம்படி இருக்க வல்ல வரம்பில் ஆற்றலையுடைய இறைவன், சிறியனவற்றில் குறைவு அற இருக்க
மாட்டானோ?’ என்கிறார். கரன் - திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்.
‘இவை உண்ட கரன்,
பரந்த தன்பரவையுள் நீர்தொறும் பரந்த அண்டம் இது எனப் பரந்துளன்; நிலம், விசும்பு ஒழிவு
அறப் பரந்து உளன்; கரந்த சில இடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும் எங்கும் கரந்து பரந்து
உளன்,’ எனப் பொருளுக்கு இயையச் சொற்களைக் கூட்டி முடிக்க.
1.
பெரிய திருமொழி, 11. 5 : 3.
|