பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
104

இரண

இரண்டாந்திருவாய்மொழி - ‘வீடுமின்’ 

முன்னுரை

    1மோக்ஷசாஸ்திரம் இறைவன் தன்மையினைக் கூறுவதும் இறைவனை அடையும் வழியைப் பற்றிக் கூறுவதும் என இருபகுதிப்பட்டு இருக்கும். அவற்றுள், பரம்பொருளைப் பற்றிக் கூறுவேண்டுவன எல்லாம் மேல் திருவாய்மொழியிலே அருளிச்செய்தார். பரம்பொருளை அடையும் வழியினைப் பற்றிச் சுருக்கமாக இத்திருவாய் மொழியால் அருளிச்செய்கிறார். ‘அவ்வழிதான் யாதோ? என்னில், இத்திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போருவர். எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்துகொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர், 2பத்தி விஷயமாக அருளிச்செய்துகொண்டு போந்தார், பின்னர், எம்மாரும் 3அவ்வாறே அருளிச்செய்தார். ‘ஆயின், ஒன்று பத்தி விஷயமாகக் கூறுதல், இன்றேல், பிரபத்தி விஷயமாகக் கூறுதல் செய்யாது நினைந்தவாறு பொருள் கூறுதல் பொருந்துமோ?’ எனின், இவருடைய பத்தியும் பிரபத்தியும் 4விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? ‘ஆயின்,

 

1. ‘மோக்ஷசாஸ்திரம் இருபகுதிப்பட்டிருக்கும்’ என்றது, மோக்ஷசாஸ்திரமான
  வேதாந்த சூத்திரம் நான்கு அத்தியாயங்களாய், முன் இரண்டும்
  பரம்பொருளைக கூறுவனவாயும், பின் இரண்டும் அதனை அடையும்
  வழியினைப் பற்றிக் கூறுவனவாயும் இருத்தல் பற்றி இத்திருவாய் மொழியும்
  மோக்ஷசாஸ்திரமாதலின், முதல் இரண்டு பதிகங்களால் அவ்விரண்டனையும்
  அருளிச்செய்கிறார் என்பதாம்.

2. ‘பத்தி விஷயமாக’ என்றது, சாத்தியபத்தி விஷயமாக என்றபடி, பிரபத்தி
  வேத குஹ்யமான ரஹஸ்ய உபாயம் ஆகையாலே முதலில் அதனை
  வெளியிட ஒண்ணாது என்று திருவுள்ளம்பற்றிப் பிரபத்தியின் பர்யாயமான
  சாத்திய பக்தியாலே அருளிச்செய்தார் என்றபடி.

3. ‘அவ்வாறே அருளிச்செய்தார்’ என்றது, பத்தி விஷயமாக அருளிச்செய்தார்
  என்றபடி.

4. ‘இவருடைய பத்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது?’
  என்றது, இறைவனுடைய திருவருளே உபாயம் என்று அறுதியிட்டு இருக்கும்
  இவருடைய சித்தாந்தத்தைப் பார்த்தால், ‘பிரபத்தியே உள்ளது; பத்தி
  இவர்க்கு இல்லை,’ என்றும், ஆர்த்தியின் மிகுதியாலே பிரபத்தியைப்
  பண்ணும் இவருடைய அநுஷ்டானத்தைப் பார்த்தால், ‘பத்தியே இவர்க்கு
  உள்ளது; மற்றையது இல்லை,’ என்றும் நினைக்கும்படியாக இருக்கின்றது
  என்றபடி.