பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
132

New Page 1

வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்: ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம் தாமாகவே நீங்கும்,’ என்றார்; பத்தாம் பாட்டில், வழிபாட்டிற்கு பற்றுக்கேடான மந்திரம் இன்னது என்றார்; முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய நன்மைக்குத் தக ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார். அன்றி, ‘இவைதாம் 1ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப்படுவன,’ என்கிறார் எனலுமாம்.

    சேர்த்தடம் - பொய்கைகளோடு பொய்கைகள் சேர்ந்திருக்கின்ற, அன்றி, பொய்கைகள் சேர்ந்திருக்கின்ற குருகூர் என்று ‘சேர்’ என்பதனை ஊருக்கு அடைமொழி ஆக்கினுமாம். அன்றி ‘சேர்’ என்பதனை வினைமுற்றாகக் கொண்டு, ‘இப்பத்தையும் சேர்’ என்று பயனிலையாகக் கோடலுமாம். தென்குருகூர்ச் சடகோபன் சொல் - நன்மை சொல்ல என்று இழிந்து தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று; 2ஆப்த தமரானவர் வார்த்தை என்கை. சீர்த்தொடையாயிரம் - 3‘எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்; அன்றி, இறைவனுடைய திருவருளால் அவனுடைய நற்குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல். ஓர்த்த இப்பத்தே - ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்து, சேதனர்க்கு நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை; அன்றி, சேதனர்க்கு மிக்க நன்மையை அளிக்க வல்லது ஒன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது எனலுமாம். உபதேசம் பலரைக் குறித்துத் தொடங்குகையால், ‘சேர்’ என்பது போன்ற ஒருமை இடங்களை எல்லாம் கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        வீடுசெய்து மற்றெவையும் மிக்கபுகழ் நாரணன்தாள்
        நாடுநலத் தால் அடைய நன்குரைக்கும் - நீடுபுகழ்
        வண்குருகூர் மாறன் இந்த மாநிலத்தோர் தாம்வாழப்
        பண்புடனே பாடியருள் பத்து.

(2)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்,

 

1. ஹிததமம் - உயர்ந்த நன்மை
2. ஆப்ததமர் - நம்பத்தகுந்தவர்களுள் உயர்ந்தவர்
3. யாப்பருங்கலக்காரிகை, 1.