|
அவன
அவன் இச்சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ என்று இறைவன் ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப்பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.
முதற்பாட்டில்,
‘எளியவன்’ என்றார்; இரண்டாம் பாட்டில், சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்; நான்காம்
பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே அடைமின்,’
என்றார்; ஆறாம் பாட்டில், அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், அடையும் விதம் இன்னது என்றும்
அருளிச்செய்தார்; ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினிர்
ஆகையாலே, விளம்பிக்க 1ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்: எட்டாம் பாட்டில்,
‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், பிரமன்
சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்; பத்தாம்
பாட்டில், இப்படி எளியவனானவனை முக்கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்; முடிவில், இதனைக்
கற்றார்க்குப் பலன் அருளிச்செய்தார்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
‘பத்துடையோர்க்கு
என்றும் பரன்எளிய னாம்பிறப்பால்;
முத்திதரும் மாநிலத்தீர்!
மூண்டுஅவன்பால்-பத்திசெயும்’
என்றுரைத்த மாறன்றன்
இன்சொல்லாற் போம்நெடுகச்
சென்றபிறப் பாம்அஞ்
சிறை.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
1.
விளம்பிக்க - தாமதிக்க
|