பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
193

    வி-கு : மாணி-பிரமசாரி; திருமணம் முடிக்கப் பெறாதவன். ‘மாணியாம் படிவம் அன்று மற்றிவன் படிவம் மைந்த’ என்றார் கம்பநாடரும். ‘என்று கலங்கி மயங்கும்’ என முடிக்க. மயங்கும்-செய்யுமென் முற்று. என்னீர்-ஒரு சொல்: முன்னிலை ஏவல்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பத்தி வாதங்கள் நமக்குத் தெரியா; ‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ என்கிறபடியே, அனுபவித்தே அறவேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு, ‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

    விதியினால் பெடை மணக்கும்-‘நீங்கள் நூல்கள் சொல்லுகிறபடியே கலக்கையாலே பிரிவின்றி இருந்தீர்கள்; இவன் அடைவு கெடக் கலங்கையாலே எனக்குப் பிரிவு வந்தது,’ என்கிறாள். இனி, விதி-புண்ணியம்; அதாவது, ‘உங்களுடைய புண்ணியத்தால்’ என்று கூறலுமாம்; காதலர்களோடு கலந்திருத்தல் புண்ணியத்தின் பலன்; அவர்களைப் பிரிந்திருத்தல் பாவத்தின் பலன்; ஆதலின், ‘விதியினால் மணக்கும்’ என்கிறாள். இனி, ‘என்னுடைய புண்ணியத்தால்’ என்றலும் ஒன்று. ‘ஆயின், இவளுடைய புண்ணியத்தால் அவை மணத்தலாமாறு யாங்ஙனம்?’ எனின், பெருமாள், பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் தேடிக்கொண்டு வருகையில், இராச்சியம் மனைவி முதலியவைகளை இழந்த மகாராசரைக் கண்டு, அவர் குறை தீர்த்த பின்பேயன்றோ தம் இழவில் நெஞ்சு சென்றது பெருமாளுக்கு? ஆதலின், இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் காரியமாக இருக்கும் அன்றே? ‘ஆயின், மகாராசர் குறையை முற்படத் தீர்ப்பான் என்?’ என்னில், 1நீர்மையுடையார்க்குத் தத்தமது இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப்படுவதாம். ‘பேடையினுடைய கருத்து அறிந்து அதனை உகப்பிக்கின்றது’ என்பாள், ‘பெடை மணக்கும்’ என்கிறாள். மென்னடைய அன்னங்காள்-

 

1. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
  வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்; - திங்கள்
  கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
  நிறையிருளை நீக்குமேல் நின்று.

(நன்னெறி)

 என்ற செய்யுளை இங்கு நினைவு கூர்க.