பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
201

New Page 1

    பொ-ரை : மிக்குப் பெருந்தன்மை வாய்ந்த தண்ணீரையுடைய தோட்டங்களில் இரையாகிய மீன்களைத் தேடுகின்ற கொடையினையுடைய சிறிய குருகே! உலகங்கள் ஏழனையும் தானே விரும்பி அவற்றிற்கு விருப்பமில்லாதனவற்றை நீக்கிக் காப்பாற்றுகின்ற நாராயணனைக் கண்டால், எனக்குத் திருவருள் புரிதல்தான் தகாததோ என்று கூறி, அவர் கூறுகின்றது ஒரு வார்த்தையைக் கேட்டு வந்து, நிறைந்த நீர் பொருந்திய கண்களையுடைய எனக்குச் சொல்லியருளல் வேண்டும்.

    வி-கு : நல்கி - விரும்பி; ‘நறுமலர்க் கோதாய் நல்கினைகேளாய்’ (மணிமேக. 12 : 56.) என்ற இடத்தும் இப்பொருள்படுதல் காண்க. பொழில் -உலகம்; ‘முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கும்’ (திருக்கோ. 130.) என்றார் மணிவாசகரும். வாரிவளங்குன்றிக்கால்’ (திருக்குறள்) என்புழிப்போற்று. கண்டக்கால் என்பது வினையெச்சம். படப்பை - தோட்டக்கூறு; ‘பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்தி’ என்பது சிலப்பதிகாரம். குருகு என்பது, ஒரு பறவை விசேடம்; இது நாரையின் இனத்தைச் சார்ந்தது.

    ஈடு :
ஐந்தாம் பாட்டு. ‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்; ஜீவிக்க நினையும் தமக்குதாம் வேண்டாவோ?’ என்கிறாள். அதாவது, ‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் 1ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.

    நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-உலகங்களைக் காப்பாற்றும்போது, செய்து தீரவேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப் பேறுதன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள். அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி. விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள். காத்தளித்தல் என்பது-விருப்பமில்லாதனவற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல். உலகம் 2ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்

 

1. ஒறுவாய்ப் போதல்-குறைந்து போதல்.

2. ஏழு தீவுகள் - நாவல், இறவி, கிரவுஞ்சம், குசை, இலவம், தெங்கு, புட்கரம்
  என்பன. உலகத்தின் சிறு பிரிவுகளாகிய தீவுகளையும் உலகம் என்ற
  சொல்லால் அருளிச்செய்கிறார்; ‘மாயோன் மேய காடுறை உலகமும்’
  (பொ. அகம். 5.) என்ற சூத்திரத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார்
  உலகத்திற்கு உட்பட்ட சிறு சிறு பகுதிகளையும் உலகம் என்ற
  சொல்லாற்குறித்தனர்.