|
New Page 1
பொ-ரை :
பலவாறு பிதற்றிக்கொண்டு வந்தவளான மிகப்
பெரிய வஞ்சனையுடைய கொடிய பூதனை இறக்கும்படி தூய்மையான குழந்தையாகி விஷம் கலந்த பாலினை அமிர்தம்போல
ஆகும்படி புசித்த மாயவன்; நித்தியசூரிகட்கு எல்லாம் ஒப்பற்ற தலைவன்; திருமகள் கேள்வன்; எல்லா
உயிர்களுக்கும் தாயைப் போன்றவன்; எல்லார்க்கும் தலைவன்; தனக்குத்தானே தலைவன்; எனக்குத்
தலைவன்; அழகிய பெருமை பொருந்திய திருமேனியையுடையவன் ஆன இறைவனைச் சார்ந்தேன்; ஆதலால்,
இனிப் பிரியேன்.
வி-கு :
இச்செய்யுள் பூட்டுவிற் பொருள்கோளுக்கு உதாரணமாம்
மாயோம், உளப்பாட்டுப்பன்மை, மாய்தல்-மறைதல்; அது ஈண்டுப் பிரிவினை உணர்த்திற்று.
‘அலவலை’ என்னும் உயர்திணை யிரு பாற்கும் பொதுச்சொல், ஈண்டுப் பெண்பாலுக்கு ஆயிற்று; ‘பலவாறு
மிகுதியாகப் பேசுகின்றவள்’ என்பது பொருள் ‘கெடச்செய்திடுவான்’ (திருக்கோ. 141.) என்புழிப்போன்று,
‘அமுதுசெய்திட்ட’ என்பதும் ஒருசொல். ‘நஞ்சின் தன்மை ஒழிந்து அமிர்தம் செய்யும் காரியத்தினைச்
செய்தலின், ‘அமிர்தாக்கிய’ என்றார்’ (திருக்கோ. 27.) என்ற பேராசிரியருரை ‘விடப்பால்
அமுதா வமுதுசெய்திட்ட’ ‘என்ற இடத்து நினைக்கத்தக்கது. ‘தம்மான்’ என்பது ‘பிரிப்பப் பிரியா
ஒரு சொல்’ என்பர் சேனாவரையர். சார்ந்து-சார்ந்தேன்; முற்று. இதனை, எச்சமாகக் கொண்டு
‘மாயோம்’ என்பதனோடு முடிப்பினும் அமையும்.
ஈடு : ஒன்பதாம்
பாட்டு. ‘நீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய
வெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்; ‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத்தாரகம்;
அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்; ‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே?’
என்றான் இறைவன்; இவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்; ‘ஆயின், பூதனையினுடைய
நஞ்சு தாரகமான நமக்கு அகாதது இல்லைகாணும்,’ என்றான்; என்ன, பொருந்துகிறார். இனி, ‘பூதனையை
முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப்புக்க என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’
என்று இயைபு கூறுவாரும் உளர்.
மாயோம் - இனி
அகன்று மாயக்கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது - விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’
என்கிறார்.
1. இத்திருப்பாசுரத்தின் அவதாரிகை இரண்டனுள், முதலது, ‘விடப்பாலமுதா
வமுது செய்திட்ட’ என்றதில்
நோக்கு, இரண்டாவது’ ‘வஞ்சப் பேய் வீய’
என்றதிலே நோக்கு.
|