ஈ
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1மீண்டும் தாம் மேற்கொண்ட
காரியத்திலே போந்து, சர்வேஸ்வரன், தன் பக்கல் சிலர் வந்து கிட்டினால் ‘இவர்கள் வேறு
பலன்களைக் கொண்டு அகலுவர்களோ, நம்மையே பலமாகப் பற்றுவார்களோ?’ என்று ஆராய்ந்து, தன்னையே
பலமாகப் பற்றினவர்களுக்குத் தானும் எல்லையற்ற இனியனாக இருப்பான் என்கிறார்.
கொள்கை கொளாமை இலாதான் - ‘இவன் பிறவியாலும் தொழிலாலும் ஞானத்தாலும் உயர்ந்தவன் ஒருவன்; இவனிடத்தில்
அந்தரங்கத் தொண்டினைக் கொள்வோம்; இவன் அவற்றால் தாழ்ந்தான் ஒருவன்; இவனிடத்தில்
புறத்தொழில் கொள்வோம்’ என்னுமவை இல்லாதான். எள்கல் இராகம் இலாதான்-திருவுள்ளத்தாலே
சிலரை இகழ்ந்திருத்தல், சிலரை ஆதரித்தல் செய்யான். ‘ஈடு எடுப்பும் இல் ஈசன்’ என்ற
இடத்தில் ‘ஏற்றுக்கொள்ளும் சமயத்தில் குறை பாரான்’ என்றார்; இங்குக் ‘கைங்கரியம் கொள்ளுமிடத்தில்
தரம் இட்டுக் கொள்ளான்’ என்கிறார். அவன் பார்ப்பது இஃது ஒன்றுமேயாம்; அஃது, யாது?’ எனின்,
விள்கை - பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை. விள்ளாமை - வேறு பலன்களை விரும்பாமை.
விரும்பி-ஆதரித்து. உள் கலந்தார்க்கு-அவனையே பலமாகப் பற்றி அவனுடனே ஒரு நீராகக் கலந்தார்க்கு.
ஓர் அமுதே-ஒப்பு அற்ற அமிர்தமாய் இருப்பான்; 2‘ஆரா அமுதே’ அன்றோ?
(5)
61
அமுதம்
அமரர்கட்கு ஈந்த
நிமிர்சுடர்
ஆழி நெடுமால்
அமுதிலும்
ஆற்ற இனியன்
நிமிர்திரை
நீள்கட லானே.
பொ-ரை : மிக்கு உயர்கின்ற அலைகளையுடைய நீண்ட திருப்பாற்கடலில்
அறிதுமில் செய்கின்றவன் அமுதத்தைத் தேவர்கட்குக் கொடுத்த, நிமிர்ந்து விளங்குகின்ற பிரகாசத்தையுடைய
சக்கரத்தைத் தரித்த நெடுமால், அவன், அமுதத்தைகாட்டிலும் மிக்க இனிமையையுடையவன் ஆவன்.
1. இத்திருப்பதிகத்தில், முதல் இரண்டு திருப்பாசுரங்களால் பரோபதேசம்
செய்தவர், நடுவில் இரண்டு
திருப்பாசுரங்களில் (3, 4.) தம்முடைய
கரணங்களுக்கு உற்ற வேறுபாட்டினை அருளிச்செய்தாராதலின்,
இங்கு
‘மீண்டும் தாம் மேற்கொண்ட காரியத்திலே போந்து’ என்று அருளிச்
செய்கிறார். அதாவது,
பரோபதேசம் செய்யப் புகுகிறார் என்றபடி.
2. திருவாய், 5. 8 : 1.
|