பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
288

எல

எல்லையானவன் தாழ்வுக்கு எல்லையாயினது, இவர்களைக் கேட்டினை அனுபவிக்கவிடவோ?’ என்கிறார். கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு சரீர சம்பந்தத்தினை விரும்பி, ‘எங்கள் ஆயர்’ என்கிறார். அன்றி, அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும், வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடைமொழி ஆக்கலுமாம். இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார், ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார் எனலும் ஒன்று. ஆயர் கொழுந்து - ஆயர்கட்கு முதல்வன்.

(2)

69

        ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
        மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
        தூய அமுதைப் பருகிப் பருகி என்
        மாயப் பிறவி மயர்வுஅறுத் தேனே.

   
பொ-ரை : ‘ஆயர்களுக்குக் கொழுந்து போன்றவனாய் அவர்களால் அடியுண்ட ஆச்சரியமான செயல்களையுடையவன்; எனக்கு மாணிக்கம் போன்ற ஒளி உருவானவன்; தூய்மையான அமுது போன்றவன் ஆன எம்பெருமானை நுகர்ந்து நுகர்ந்து, எனது ஆச்சரியமான பிறவி காரணமாக வருகின்ற அறிவு இன்மையைப் போக்கினேன்,’ என்கிறார்.

    வி-கு : ஆவினையுடையவர் - ஆயர்; ஆ - பசு. ‘பருகி அறுத்தேன்,’ என முடிக்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. வேறு பயனை விரும்புகிற கேவலரை நிந்தித்தார் முதற்பாசுரத்தில்; இரண்டாம் பாசுரத்தில், வேறு பயனைக் கருதாத அடியார்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்தார். ‘இவ்விருதிறத்தாரில் நீவிர் யாவிர்?’ என்ன, ‘நான் வேறு பயனைக் கருதுகின்றவன் அல்லேன்; வேறு பயனைக் கருதாதவனாய் அவனைப் பற்றினேன்,’ என்று நேர்கொடு நேரே 1சொல்லவும் மாட்டாரே; ஆதலால், ‘அவனை அனுபவியாநிற்க,

 

1. ‘சொல்லவும் மாட்டாரே’ என்றது, சொன்னால் தற்புகழ்ச்சியாம் என்பது.