அமரர
அமரர் முழு முதல்
ஆகிய-நித்தியசூரிகளுடைய சொரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவனை. ஆதியை-1‘தன்
பக்கலுள்ள பாவபந்தம் ஆத்துமாவை விட்டுப் பிரிக்க முடியாதது என்பதனை அறியாமல் இருக்கிறவர்கட்கும்
தன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக் காரணங்களையும் உடல்களையும் கொடுக்குமவனை. ‘ஆதியை’ என்பது முதல்
லீலாவீபூதியைப் பற்றியது. அமரர்க்கு அமுது ஈந்த-அவன் கொடுத்த கரணங்களைக்கொண்டு, ‘எங்களுக்கு
நீ வேண்டா; உப்புச்சாறு அமையும்,’ என்பார்க்குக் கடலைக் கடைந்து அமிருதத்தைக் கொடுக்குமவனை.
ஆயர் கொழுந்தை-‘அவ்வமிருதம் வேண்டா, நீ அமையும்,’ என்பவர்கட்காக வந்து அவதரித்துத் தன்னைக்கொடுக்குமவனை.
என் ஆவி அமர அழும்பத் துழாவி அமரத் தழுவிற்று-இப்படி 2இரண்டு உலகங்களையுமுடையவனாய்
இருக்கிறவனைக் கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து, எனது உயிரானது ஒரே பொருள் என்னலாம்படி
கலந்தது. இனி அகலுமோ-இரண்டு பொருளாகில் அன்றோ பிரித்தல் இயலும்? ‘ஆயின், சொரூபத்தால்
ஐக்கியம் சொல்லுகிறாரோ?’ என்னில், ‘பிரகாரமும் பிரகாரியும் ஒரே பொருள் என்னும் புத்தி
பிறந்தால் பிரிக்கப்போமோ?’ என்கிறார்; ‘ஆயின், சாதி குணங்களை அன்றோ பிரித்தல் இயலாது?
உயிர் உடல்கள் ஆகிற இரு பொருள்களைப் பிரித்தல் இயலாது என்றல் பொருந்துமோ?’ எனின், ‘சாதி
குணங்களைப் போன்று 3பொருளுக்கும் நித்ய தத் ஆஸ்ரயத்வம் உண்டாகில் பிரிக்கப்போமோ?’
என்றபடி
(9)
1.
‘‘அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ எண்ணக்
காரணம் யாது?’ எனின்,
‘தன் பக்கலுள்ள பாவபந்தம்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். அதாவது, இவ்வுலகில்
உள்ளார்க்கும்
நித்தியசூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு
இச்சை இல்லாமையாலே,
யோக்கியதையைப் பண்ணிக்கொடுக்குமளவே
செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் என்றபடி.
‘தன்’ என்றது,
ஈஸ்வரனை.
2. இத்திருப்பாசுரத்தில் ‘அமரர் முழுமுதல்’ என்றதனால் நித்திய விபூதியையும்,
‘ஆதியை’ என்றது முதலியவற்றால்
லீலா விபூதியையும் கூறினார் ஆதலின்,
ஈண்டு ‘இரண்டு உலகங்களையும்’ என்கிறார்.
3.
‘நித்திய தத்ஆஸ்ரயத்வம் உண்டாகில்’ என்றது, ‘நித்திய தத்ஆஸ்ரயத்வ
புத்தி பிறந்தால்’
என்றபடி. நித்ய தத் ஆஸ்ரயத்வம்-எப்பொழுதும் ஒரு
பொருளை மற்றொரு பொருள் சேர்ந்தே இருத்தல்.
ஈண்டு, விளக்கு,
விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும்,
‘ஒன்றனை
விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருப்பதனை நினைவு கூர்க.
|