பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
306

பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர். ‘ஆயின்’ 1இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே பட்டருடைய திருவுள்ளம். ‘யாங்ஙனம்?’ எனின், பத்தர் முத்தர் நித்தியர் என்னும் மூவகைச் சேதநரோடும் இறைவனாகிய தான் பரிமாறும் இடத்தில், அவர்களைத் தன் நினைவின் வண்ணம் வருமாறு செய்தல் இன்றி, நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போன்று, தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் என்னும் அம்முறையிலே அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச்செய்கிறார்.

78

        ஓடும் புள்ஏறிச், சூடும் தண்துழாய்
        நீடு நின்றுஅவை, ஆடும் அம்மானே.


    பொ-ரை :
அம்மான், கருடப்பறவையின்மேல் ஏறி உலாவுதல் செய்வான்; குளிர்ந்த திருத்துழாய் மாலையினைச் சூடிக்கொள்வான்; அச்செயல்கள் எப்பொழுதும் நிற்க, அவற்றோடு கலந்து பழகுவான்.

    வி-கு : ‘ஓடும், சூடும், ஆடும்’ என்பன ‘செய்யும்’ என் முற்றுகள். நின்று - நிற்க. இது, செயவெனெச்சந்திரிபு. புள்ளும் துழாயும் உயர்திணையாய் இருப்பினும், சொல்லால் அஃறிணையாதலின், ‘அவை’ என அஃறிணைச்சொல்லால் அருளிச்செய்கிறார்.

    இத்திருப்பதிகம், இருசீரடி நான்காய், ஒரு பொருள்மேல் மூன்று அடுக்காது தனித்து வந்த வஞ்சித்துறை.

    ஈடு : முதற்பாட்டு. நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப்பாசுரத்தில். ‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக்கேடு இல்லையே? அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவகுணம் எற்றிற்கு?’ என்னில், அவர்கள் 2பலராய் இருத்தலானும், அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும், அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவகுணம் வேண்டும்.

    புள் ஏறி ஓடும் - பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்பன். ‘ஆயின், ‘புள் ஏறி ஓடும்’ என்றதில் ஆர்ஜவம் யாது?’ என்னில், திருவடி ‘இப்பொழுது அடியேன்மேல் எழுந்தருள வேண்டும்’ என்று விரும்பினால், ‘வேண்டா’ என்னாது மேற்கொள்ளுகை

 

1. பட்டர் ‘நீர் புரை வண்ணன்’ என்பது முதலான திருப்பாசுரங்களைக்
  கடாக்ஷித்து, ஆர்ஜவ குணத்தைக் கூறுகிறது’ என்று அருளிச்செய்வார்.

2. 59-ஆம் திருப்பாசுரத்தில், ‘பிணங்கி அமரர் பிதற்றும், குணங்கெழு
  கொள்கையினானே’ என்ற அடிகட்கு அருளிச்செய்த வியாக்கியானத்தை
  ஈண்டு நினைவு கூர்க.