பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
330

விளையும் பூமி. ஆயர் மடமகள் - அத்தைப் புஜிக்கின்ற 1போக்தா வானவள் என்று கூறலுமாம். இவர் மூவர் - மேன்மைக்கும் புருஷ காரத்திற்கும் தனித்தனியே அமைந்திருக்கிற இவர் மூவர். ஆளும் உலகமும் மூன்று - அவர்களுடைய 2படுக்கைப்பற்று இருக்கிறபடி. இனி, இதற்குக் ‘கீழும், மேலும், நடுவுமான உலகங்கள்’ என்று பொருள் கூறலும் ஆம். இனி, உலகம் என்பதனை ஆகுபெயராகக் கொண்டு உலகத்தில் வாழ்கின்ற பத்தர், முத்தர், நித்தியர் என்னும் மூவகைச் சேதனர் என்று பொருள் கோடலும் ஒன்று.

    உடன் அவை ஒக்க விழுங்கி-அவற்றுள் ஒன்றும் தப்பாதபடி ஒரே காலத்தில் திருவயிற்றிலே வைத்து. ‘ஆயின், மேற்கூறிய மூவகைப்பட்ட ஆத்துமாக்களையும் விழுங்கினானோ? எனில், அன்று; 3‘அவை’ என்ற சுட்டால் மூவகை ஆத்துமாக்களையும் பொதுவிற் கூறினரேனும், பிரளயத்தால் அழிக்கப்படுகின்ற பத்த ஆத்துமாக்களையே கொண்டு ஏனைய முத்தர் நித்தியர்களை நீக்குக. ஆல் இலை சேர்ந்தவன்-எல்லா உலகங்களையும் வயிற்றிலே சேர வைத்து ஆல மரத்தினது இளந்தளிரிலே சாய்ந்தருளினவன். அதாவது, 4அகடித கடநா காமர்த்தியத்தையுடையவன் என்றபடி. எம்மான் - அச்செயலாலே என்னை அடிமை கொண்டவன். 5‘பத்திராலம்பனம் பண்ணி அடிமை கொண்டான்’ என்பதாம். மேற்கூறிய அகடித கடநா சாமர்த்தியத்திற்கு மேலே ஒரு அகடித கடநா சாமர்த்தியமாயிற்று

 

1. போக்தாவானவள் - அனுபவிக்கின்றவள்.

2. படுக்கைப்பற்று - பெண்களுடைய சீமை; சீதனம்.

3. ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த’ (தொ. சொ. 221.) என்று சூத்திரத்து
  ஆசிரியர் தொல்காப்பியனார், உயர்திணைத்தெரிநிலை வினைக்கு ஒதிய
  ஈறுகளே குறிப்பு வினைக்கும் வரும் எனப் பொதுவிற்கூறி
  மாட்டெறிந்தாராயினும், தெரிநிலை வினைக்கு ஓதிய இருபத்து மூன்று
  ஈறுகளுள், காலங்காட்டுகிற பதினொரு ஈறுகளையும் நீக்கிக் காலங்காட்டா
  தனவான ஏனைய பன்னிரண்டு ஈறுகளையுமே அச்சூத்திரத்திற்குப்
  பொருளாகக் கொள்ளப்படுவது போன்று, ஈண்டும், ‘அவை’ என்ற சுட்டால்
  குறிக்கப்படும் மூவகை உயிர்களுள், பிரளயத்தால் அழிக்கப்படாத மோட்ச
  உலகத்துள்ள இருவகை உயிர்களை நீக்கிப் பிரளயத்தால் அழிக்கப்படுகின்ற
  பக்தர்களாகிய உயிர்களையே கோடல் வேண்டும்.

4. அகடித கடநா சாமர்த்தியம் - செய்தற்கு அரிய செயல்களையும் செய்து
  முடிக்கும் ஆற்றல்.

5. பத்திராலம்பனமாவது, ஆலிலையைப்பற்றுதல்; இங்கு ஆவண ஒலையைக்
  குறித்தது: அதாவது, அடிமை ஓலை என்றபடி.