பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
342

New Page 1

தேவர்கள் எல்லோரும், எனது நெற்றியிலே நிலைபெற்று என்னை அடிமைகொள்ளுகின்ற மலர்போன்ற இரண்டு திருவடிகளையும் தங்கள் தங்கள் தலைகளின்மீது அணிந்துகொண்டு, தொகுதியான திருத்துழாய் மாலையினைத் தரித்த திருமுடியையுடைய அழகிய கண்ணபிரானை வணங்குவார்கள்; அவர்கள் அவ்வாறு வணங்கிக்கொண்டிருக்க, அக்கண்ணபிரான் வந்து எனது உச்சியிலே புகுந்தான்.

    வி-கு : ‘ஆளும்’ என்ற எச்சத்தைப் ‘பாதங்கள்’ என்னும் பெயருடனும், ‘சூடி’ என்னும் எச்சத்தைத் ‘தொழுவார்’ என்னும் வினையுடனும் முடிக்க. தொழுவார், முற்று.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘பிரமன் முதலான தேவர்கள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான் 1என்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

    நெற்றியுள் நின்று எனை ஆளும் - நெற்றியுள் நின்று என்னை அடிமை கொள்ளுகின்ற. நிரை மலர்ப்பாதங்கள் சூடி - மலரை நிரைத்தாற்போன்று இருக்கின்ற திருவடிகளைத் தலைகளிலே சூடி. கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார் - செவ்வி பெற்றுத் தழைக்கிற திருத்துழாயோடே கூடின திருமுடியையுடையவனாய்க் காட்சிக்கு இனிய வடிவையுமுடைய உபகாரத்தைச் செய்கின்றவனான கிருஷ்ணனைத் தொழுகின்றவர்கள். ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திருமுடியிலே வைத்தாலும், திருக்குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையாநிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். கற்றை - தழைத்தல். 2‘தழைக்குந் துழாய்’ என வருமாறுங்காண்க. ஒற்றைப்பிறை அணிந்தானும் - ஒரு கலையோடு கூடிய சந்திரனைச் சடையிலே தரித்துச் சுகத்தில் மிகுந்தவனாய் இருக்கிற சிவபெருமானும். நான் முகனும்-அவனுக்குத் தந்தையான பிரமனும். இந்திரனும்-தேவர்களை 3மெய்க்காட்டுக் கொண்டிருக்கிற இந்திரனும். மற்றை அமரரும்

 

1. ‘வந்து எனது உச்சியுளானே’ என்றதனை நோக்கி, அவதாரிகையில்
  ‘என்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்து’ என்று அருளிச்செய்கிறார்.

2. பெரியதிருவந்தாதி, 39. கற்றை என்பதற்குத் தொகுதி என்பது பொருள் :
  கருத்துப்பொருளாகத் தழைக்கும் என்று பொருள் அருளிச் செய்கிறார்.

3. மெய்க்காட்டு - நேரில் வந்து தோற்றுகை. ‘தேவர்களைச் சனியும் புதனும்
  மெய்க்காட்டுக்கொண்டு அவர்கள் மிகுதி குறைகள் ஆராய்ந்து போருகிற
  இந்திரனும்’ (ஈடு. 3. 6 :  4.) என்ற இடத்தும் இப்பொருள் படுதல் காண்க.