பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
69

சர

சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டியாகையாலே, தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார்; அக்குணங்கள்தாம் உருவினைப் பற்றி அல்லது இராமையாலே அவற்றுக்குப் பற்றுக்கோடான உருவினை ‘அவன்’ என்று அருளிச்செய்தார். முதற்பாட்டில், அங்கு எடுத்துக் கூறப்பட்ட இறைவன் 1எக்குற்றமும் தன்னைச் சாராது இருக்குந் தன்மையாலும்  (ஹேயப்பிரத்யநீகதை), 2எல்லா நற்குணங்கட்கும் இருப்பிடமாய் இருக்குந் தன்மையாலும் (கல்யாணகுணைகதாந்தை) 3உயிர்ப்பொருள் உயிரல் பொருள் ஆகிய இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்டிருப்பவன் என்று அவ்விறைவனை அனுபவிக்கிறார் இப்பாட்டில்.

    மனனகம் மலம்அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் - இதனால், உயிர்களின் தன்மையைக்காட்டிலும் இறைவனுடைய தன்மை வேறுபட்டு இருக்கும் என்கிறார். ‘ஆயின், ‘மனனகம் மலமற மலர்மிசை எழுதரும்’ என்று இத்துணை அடை மொழிகளைச் சேர்த்துக் கூறுங்கருத்து யாது?’ எனில், இறைவனுடைய வேறுபட்ட தன்மையினை உணர்ந்து உணர்ந்து இன்புறுகின்ற இவ்வாழ்வாருடைய அநுபவ முறை இருக்கிறபடி. மனன் என்றது, மனம் என்றபடி அகம் - உறுப்புகள் இல்லாத மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே, ‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி. இனி, மனமானது வெளிப்பொருள்களிலும் உட்பொருளிலும் செல்லுந்தன்மையது; இவ்விரண்டனுள் வெளிப்பொருள்களில் செல்லாது உட்பொருளில் மட்டும் செல்லுகின்ற மனம் என்று பொருள் கோடலுமாம். இப்பொருளுக்கு ‘அகம் மனம்’ என முன்பின் மாற்றுக. மலம் அற - மனத்தினிடத்தில் உண்டான அறிவின்மை முதலிய குற்றங்கள் முழுதும் நீங்க. உயிர்களும் அழிவற்றவை; ஞானமும் அழிவற்றது; ஆகையால், இக்குற்றங்கள் உயிர்களைச் சேர்ந்தவையும் அல்ல; ஞானத்தைச் சேர்ந்தவையும் அல்ல; உயிரினுடைய 4தர்மபூத ஞானத்துக்குத் தோற்றம் மறைவுகளை வழங்குவது ஞானம் பரவுதற்கு வழியாக உள்ள

 

1. ‘எக்குற்றமும் தன்னைச் சாராதிருக்கும் தன்மை இப்பாட்டில் கூறப்பட்டிலதே?’
  எனின், ‘முழுநலம்’ என்று கூறினமையின், எக்குற்றமும் தன்னைச் சாராதிருக்குந்
  தன்மையும் தானே பெறப்படுதலின், அதனையும் கொண்டு கூறினார்.
  இவ்விரண்டும் ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்று இராது என்க.

2. ‘முழுநலம்’ என்றதில் நோக்கு.

3. ‘மனன் உணர்வு அளவிலன்; பொறி உணர்வு அவை இலன்’, என்றதில்
  நோக்கு.

4. தர்மபூதஞானம் - தர்மமான அறிவு; நான் படிக்கிறேன்; நான் உணர்கிறேன்’,
  என்பன போல உண்டாகும் அறிவு.