பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

154

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்கிறபடியே, வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார் எனலுமாம்.

    உள்ளி -1‘நினைந்து’ என்று அநுசந்தானத்திற்குப் பிராயச் சித்தம் தேடவேண்டாமல் நினைத்து. வணங்கி - குணங்களின் பலாத்காரத்தால் தூண்டப்பட்டுச் செருக்கு அற்று வணங்கி. இனி, 2‘வணங்கினால், உன் பெருமை மாசு உணாதோ’ என்று நாம் வணங்கி எனலுமாம். நாம் மகிழ்ந்து ஆடபகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியான பொருளைக் கனாக்கண்டு அறியாத நாம் மகிழ்ந்தவராய் அதற்குப் போக்கு விட்டு ஆட. நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே - நாட்பூ அலருமாறு போன்று நாக்கின் நுனியிலே மலர்கின்ற பாவானது என்பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இதுதன்னை இயல்பாக உடையையாய் இருக்கிற பரம உதாரனே! 3மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.

    ‘தாமரைக் கண்ணனாய் விண்ணோர் பரவும் தலைமகனாய்த் துழாய் விரைப்பூமருவு கண்ணி எம்பிரானாய்ப் பொன் மலையாய் இருக்கிற தன்னை, நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆடும்படி, நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை 4ஏய்ந்த வள்ளலே!’ என்று சொல்லுகிறார் ஆகவுமாம். அன்றி, ‘தாமரைக் கண்ணனை’ என்பது போன்ற இடங்களிலுள்ள ஐகாரத்தை அசைநிலை ஆக்கி, ‘தாமரைக் கண்ணனாய், பொன் மலையாய் இருக்கிற நீ, நாம் மருவி - நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே- இதுவும் ஒரு தன்மையே! வள்ளலே - பரமோதாரனே!’ என்கிறார் ஆகவுமாம்.

(3)

_____________________________________________________________

1. திருவாய். 1. 5: 1.

  ‘அநுசந்தானத்துக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டாமல்’ என்றது,

  ‘தம் தாழ்மையை நினைத்து அகல வேண்டாமல்’ என்றபடி. பிராயச் சித்தம் - ஈண்டு
  அகலுதல்.

2. திருவாய். 1. 5 : 1.

3. முதற்பத்து, 213 ஆம் பக். ‘பாடும் என் நா அவன் பாடல்’ என்றதன் உரையை ஈண்டு
  ஒப்பு நோக்குக.

4. இவ்வாறு பொருள் அருளிச்செய்வதனால் ‘பான்மை ஏய் வள்ளலே’ என்ற பாடமும்
  உண்டு போலும்! பன்னீராயிரப்படி உரைகாரர் ‘பான்மை ஏய்’ என்ற பாடமே கொண்டார்.
  இருபத்து நாலாயிரப்படி உரைகாரர் இரண்டு பாடமும் கொண்டுள்ளார்.