பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அழ

156

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    அழித்தது போன்று அழித்தவனே! என் மரதக மலையே -1உன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய், சிரமத்தைப் போக்கக் கூடிய தாய், அளவிட முடியாத வடிவழகை அன்றோ எனக்குக் கொடுத்தாய்? உன்னை நினைந்து எள்கல் தந்த எந்தாய் - உன்னை நினைத்தால் மற்றைப் பொருள்களை நான் விடும்படி பண்ணினவனே! இனி, ‘என்கல் தந்த’ என்பதற்கு, ‘உன்னை நினைத்தால், 2‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்’ என்கிறபடியே, அள்ளி எடுக்க வேண்டும் படி பண்ணித் தந்த என் நாயனே!’ என்று பொருள் கூறலும் ஆம். எள்கல் - ஈடுபாடு. முன்னைய பொருளில், கொடைத்தன்மை விளங்கும். உன்னை எங்ஙனம் விடுகேன் - 3‘உன் விஷயத்திலே இப்படி ஈடுபட்ட யான் உன்னை விடக் காரணம் உண்டோ?’ என்னுதல்; ‘உன்னை நினைத்தால் மற்றைப் பொருள்களில் விரக்தனான யான் விட மரியாதை உண்டோ?’ என்னுதல். 4உதாரன் அல்லை என்று விடவோ? விரோதியை அழிக்கின்றவன் அல்லை என்று விடவோ? உனக்கு வடிவழகு இல்லை என்று விடவோ? எங்ஙனம் விடுவேன்?’ என்றபடி.

    இனி, மேல் எல்லாம் அவனுடைய ஐயத்தினைத் தீர்க்கிறார்; வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து - கடலோடு ஓத்திருந்துள்ள உன்னுடைய நற்குணங்களை நாலு மூலையும் புக்குப் பரந்து, நான் 5மறுநனைந்து பிரீதியினாலே தூண்டப்பட்டவனாய்க் கொண்டு பாடி, அத்தாலே செருக்கி மிகவும் பிரீதனாய். உள்ள நோய்கள் எல்லாம் துரந்து - கர்மம் காரணமாக வருமவை, உன்னைப் பிரிந்து படுமவை, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்று வருமவை

____________________________________________________________

1. ‘உன்னை நீ ஆக்கும்படி’ என்றது, ‘உன்னைப் ‘பரன்’ என்று பிரகாசிப்பிக்கிறபடி’
  என்றபடி. படி - திருமேனி. ‘உருலின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிதே’ என்றார்
  திருத்தக்க தேவரும்.

2. பெரிய திருவந். 24.

3. மேல், ‘எள்கல் தந்த’ என்பதற்குக் கூறிய இருவகைப் பொருள்களோடு இங்குக்
  கூறப்படும் இருவகைப் பொருள்களையும் முறையே பொருத்திக்கொள்க.

4. ‘உதாரன் அல்லை என்று விடவோ?’ என்றது முதலான மூன்று பொருள்களும்
  ‘வள்ளலே! மதுசூதனா! என் மரதகமலையே!’ என்ற மூன்றையும் நோக்காகக் கொண்டு
  எழுந்தன.

5. மறுநனைதல் - மறுபாடுருவ நனைதல்; அதாவது, ‘பூர்ணானுபவம் பண்ணி’ என்றபடி.