பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

164

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

கரையிலே சேருமாறு போன்று, மாறிமாறிப் பிறந்து வாராநிற்க, திருவடிகளிலே கிட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை. “பாவங்களை அனுபவித்து மீளுதல், பிராயஸ்சித்தம் பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை’ என்பார், ‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறார். அடியை அடைந்து உள்ளம் தேறி - இதனால், ‘உள்ளம் தேறி அடியை அடைந்தவன் அல்லன்: அடியை அடைந்து உள்ளம் தேறினவன்’ என்கிறார். நெடுநாள் உள்ள விஷய வாசனையாலும் பகவானைப் பற்றாத காரணத்தாலும் உள்ள மனத்தின் மயக்கம் நீங்கித் தெளிந்து. தெளிந்த அளவே அன்றியே, 1ஈறு இல் இன்பத்து இருவெள்ளம் மூழ்கினன் யான் - முடிவில்லாமல் இருக்கின்ற பெரிய ஆனந்தக்கடலிலே மூழ்கினேன். ‘திருவடி, திருவனந்தாழ்வான் இவர்கள் குமிழி நீர் உண்கிற விஷயத்திலே அன்றோ யான் மூழ்கினேன்?’ என்பார் ‘யான் மூழ்கினேன்’ என்கிறார்.

    ‘ஆயின், உம்முடைய விரோதிகள் செய்த காரியம் என்?’ என்ன, 2‘அதற்குக் கடவாரைக் கேண்மின்’ என்கிறார் மேல்: அசுரர்தம் பல் குழாங்கள் பாறிப் பாறி நீறு எழப் பாய்பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய் - அசுர வர்க்கத்தினுடைய பல வகைப்பட்ட குழாங்களானவை பாறிப்பாறி நீறு எழுந்து போகும்படியாகப் பகைவர்கள் மேலே பாயாநின்றுள்ள 3அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய சிறப்பின் வேறுபாடு தோன்ற இருந்தவனே! பெரிய திருவடிக்கு அத்விதீயமாவது, இறைவன் கருத்து அறிந்து நடத்தலில் தலைவனாதல். இறைவன் பகைவர்களை அழித்தற்குப் பண்ணின செயல், பெரிய திருவடி திருத்தோளில் பேராதே இருந்தது இத்தனையே’ என்பார், ‘ஏறி வீற்றிருந்தாய்’ என்கிறார். உன்னை என்னுள் நீக்கேல் - ஸ்வாமியான நீ, இனி ஒரு காலமும் உன்னை என் பக்கல்நின்றும் பிரித்துக்கொண்டு போகாது ஒழிய

_____________________________________________________________

1. ‘ஈறில் இன்பம்’ என்றது, அழியுந்தன்மையதான ஐஸ்வர்ய இன்பத்தில் வேறுபாடு. ‘இரு
  இன்பம்’ என்றது, அற்பச் சுகமான கைவல்ய இன்பத்தில் வேறுபாடு.

2. ‘அதற்குக் கடவாரைக் கேண்மின்’ என்றது, ‘குழாங்கள் நீறு எழப் பாய் பறவை’
  என்றதனை நோக்கி. ‘கடவார்’ என்றது பறவையை.

3. அத்விதீயம் - தன்னைப் போன்றது ஒரு பொருள் இரண்டாவதாக இல்லாதது.