பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

168

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

யுடையவனே! நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் தாயும் தந்தையும் உயிரும் ஆகின்றவனே! உன்னை நான் அடைந்தேன்; இனி, விடுவேனோ? விடேன்’ என்க.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘நாம் போகாதொழிகிறோம்; நீர் நம்மை விடாதொழிய வேண்டுமே?’ என்ன, ‘நீ செய்த உபகாரங்களைக் கண்டு வைத்து விட மரியாதை உண்டோ?’ என்கிறார். இனி, ‘முக்காலத்திலும் எல்லாவித பந்துவுமான உன்னை விடக் காரணம் இல்லை’ என்கிறார் எனலுமாம்.

    போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ - முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, 2‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி 3எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ? பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே- பரம்பி இருப்பதாய், 4இயல்பிலே அமைந்த நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! 5‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

    பரமா - குணங்களுக்கும் காத்தலுக்கும் உன்னை எண்ணினால், பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்குமவனே! தண் திருவேங்கடம் மேகின்றாய் -‘இப்படி எல்லார்க்கும் மேம்பட்ட

_____________________________________________________________

1. பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளை நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘தாய்
  தந்தை’ என்ற இடத்தில் உபகாகத்துவமும், பந்துத்துவமும் தோன்றும்.

2. ஸ்ரீராமா. சுந்த. 38 : 33.

3. தாய் தந்தையர்களுக்குச் சம்பந்தமும் உபகாரகத்துவமும் உண்டாகையாலே ‘எல்லா
  வகையாலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

4. தொன்மை - பழமை; அதனால் பலித்த பொருள், ‘இயல்பிலேயமைந்த’ என்பது.

5. ஸ்ரீராமா. சுந்த. 21 : 20.