பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

188

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    விட்டு இலங்கு செஞ்சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் - மதகு திறந்தாற்போலே விட்டு விளங்காநின்றுள்ள சிவந்த ஒளியையுடைத்தான தாமரை போலே ஆயிற்றுத் தாம் தோற்றி விழும் திருவடிகள், தம்மை அணைத்த கைகள், குளிர நோக்கின திருக்கண்கள் இவை. உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே, அது தன்னையே அடைகொடுத்து ஓதுகிறார். அன்றி, ‘விட்டு’ என்பதனை வினையெச்சமாக்காது பெயர்ச்சொல்லாகக் கொண்டு ‘விஷ்ணு’ என்று பொருள் கூறலுமாம். ‘விஷ்ணுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம்’ என்பது பொருள். விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு 1‘இராமர் தமது திருமேனியின் ஒளியாலே தண்டகவனத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரன் போன்று காணப்பட்டார்’ என்னுமாறு போன்று இராநின்றது வடிவழகு; தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி.

    விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு -விட்டு இலங்குகின்ற ஒளியையுடைய சந்திரனைப் போன்று இராநின்றது ஸ்ரீ பாஞ்சஜன்யம். இறைவனைச் சார்ந்து இருத்தலாலே வந்த ஜஸ்வர்யத்தையுடையதாதலின், ‘சீர் சங்கு’ என்கிறார். அதாவது, 2‘உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்: கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே’ என்கிறபடியே, 3பிரசாதத்தைச் சூடிக் கைப்புடையிலே கிடப்பாரைப்போலே, அவன் வாயாலே ஊட்ட உண்டு வடிவைப் பாராதிருக்கையாலே சாய்வது; ‘உன் செல்வம் சால அழகியது!’ என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் அன்றோ? சக்கரம் பரிதி - கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லுமித்தனையேயாம்; ஆதித்தனைப் போலே அன்றே திருவாழியாழ்வான் இருப்பது? விட்டு இலங்கு முடி- 4இவை இத்தனையும் தன புகராலே முட்டாக்கு இடுமாயிற்றுத் திருமுடி. அம்மான் மதுசூதனன்தனக்கே - சர்வேஸ்வரனாய் இருந்தும் அடியார்களுடைய பகைவர்களை அழிக்கும் தன்மையனானவனுக்கு.

(5)

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

2. நாய்ச்சியார் திருமொழி. 7 : 8.

3. பிரசாதத்தைச் சூடி - பிரசாதத்தை உண்டு, கைப்புடை - திருக்கோபுர வாசலில் அறை.
  ‘வாயது கையது’ என்பது, சிலேடை.

4. உபமானத்தைச் சொல்லாமல் உபமேயமாத்திரத்தைச் சொல்லுகையாலே பலித்த பாவம்,
  ‘இவை இத்தனையும்’ என்று தொடங்கும் வாக்கியம்.