பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பூந

224

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு -1அருச்சுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு பாணம் பெற வேண்டுவதாய் அவன் அதற்கு முயலுகின்ற காலத்திலே, இவன் சிரமத்தை ஆற்றுகைக்காகப் ‘புஷ்பங்களை நம் காலிலே இட்டு ஜீவி’ என்று அருளிச்செய்ய, அவனும் திருவடிகளிலே இட, அந்தத் தெய்வம் இராத்திரியிலே கனாவிலே அந்த மலர்களைத் தன் தலையிலே தரித்துக்கொண்டு வந்து தோன்றிப் பாணத்தைக் கொடுத்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்றே? அதனை அருளிச்செய்கிறார். பூந் தாமம் -அழகிய மாலை என்னுதல்; பூமாலை என்னுதல். அவற்றோடு ஒத்த மலர்கள் அன்றி அம்மலர்களையே கண்டான் ஆதலின், ‘அவையே’ என்றும், பாடே பார்ஸ்வத்திலே அன்றி அவன் தலை மேலே கண்டானாதலின், ‘சிவன் முடிமேல்’ என்றும், ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றியே, சுருதி ஸ்மிருதிகளால் ஆதல் அன்றியே, தானே கண்டானாதலின், ‘தான் கண்டு’ என்றும் அருளிச்செய்கிறார். காணுதல் - 2பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படி

_____________________________________________________________

1. இச்சரிதப் பகுதியை, வில்லிபாரதம் (மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு) பதின்மூன்றாம்
  போர்ச்சருக்கம், 193 முதல் 221 முடிய உள்ள செய்யுள்களில் காண்க. மேலும்.
  பண்டைக்காலத்துப் புலவர் ஒருவர், ‘பூவை நிலை’ என்னும் துறையில் அமைத்துப்
  ‘பாண்டிய! நீ கண்ணனாய்ப் பாரதப்போர் நடத்திய காலத்தில் தேர் லிசயன் உன்
  அடிகளில் சார்த்திய மலர்கள், சிவன் முடியின்மேல் காணப்பட்டன; இன்று, முடி மன்னர்
  தத்தம் முடிகளிலே சூடிய மலர்கள் நின் அடிமிசையே காணப்படுகின்றன; இஃது
  என்னே!’ என்ற கருத்தமைய,

  ‘செங்கண் நெடியான்மேல் தேர்விசயன் ஏற்றியபூப்
  பைங்கண்வெள் ளேற்றான்பால் கண்டற்றால் - எங்கும்
  முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
  அடிமிசையே காணப் படும்.’                        

(முத்தொள்ளாயிரம், செய் 3.)

  என்று பாடிய பாட்டும் இங்கு ஒப்பு நோக்கலாகும்.

      இதற்கு வேறு வகையாகக் கூறும் பொருள் சிறவாமை காண்க. இங்ஙனம் பொருள்
  கூறலே நூலாசிரியர் கருத்து என்பதனை இதற்குப் பின் அடுத்து வருகின்ற

  ‘கூந்தன்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்ப்
  பூந்தொடியைப் புல்லிய ஞான்றுஉண்டால் -யாங்குஒளித்தாய்
  தென்னவனே! தேர்வேந்தே! தேறுநீர்க் கூடலார்
  மன்னவனே! மார்பின் மறு?’                        

(முத்தொள்ளாயிரம், 4.)

  என்ற செய்யுளால் உணரலாகும்.

2. பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படி - முன் கண்டது யாது ஒன்று? அதுவே பின்னர் நினைவிற்கு
  வரும்படியாக.