பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

எட்டாந்திருவாய்மொழி - பா. 8

229

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் அவனுடைய அற்புதமான காரியங்களைத் தனித்தனியும் திரளவும் அளவிடப் போகா’ என்கிறார்.

    காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை - சர்வேஸ்வரனாயிருந்தும் கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாளானவனை 2அவன்தானே காட்ட நான் கண்டது போன்று, காண்பார்க்குக் காணலாமித்தனை போக்கி, தன் முயற்சியாலே சிலர்க்குக் காணப்புக்கால் காணப்போமோ?’ ‘அது கிடக்க. காண்பார் சிலர் உளர் ஆனாலோ?’ எனின், என் காணுமாறு - எவ்வளவைத்தான் காண்பது? 3ஞானமுடையார் சிலர் காண இழிந்தார்கள் என்று விஷயத்தை அளவிட்டு அறியப்போகாதே. ‘ஏன் தான் அளவிட்டு அறியப் போகாதொழிகிறது?’ என்னில், இது அன்றோ அவனுடைய செயல் இருக்கிறபடி? ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா - அவனுடைய ஊணாகிற ஒரு செயலைச் சொல்லப் பார்க்கில், ‘எல்லா உலகங்களும் ஒரு கவளத்துக்கும் போரா; இச்செயலையுடையவனை ஒருவராலே அளவிட்டு அறியலாய் இருக்கிறதோ? அவனுடைய செயல் அளவிட ஒண்ணாதது என்கிறார் மேல். சேண்பால் வீடோ உயிரோ மற்று எப்பொருட்கும் - உயர்த்தியே சுவபாவமாக உடைத்தான பரமபதம் என்ன’ 4முக்தாத்ம சொரூபம் என்ன, மற்றும் உண்டான தேவதைகள் முதலானவைகள் என்ன, இவற்றை உடைத்தான. 5ஏண்பாலும் சோரான் - என்னப்பட்ட அவ்வவ்விடங்களை வியாபித்து விடாதே நிற்கும் என்னுதல்; எட்டுத் திக்கு

____________________________________________________________

1. ‘ஆர்’ என்பதிலே நோக்காக ‘எத்தனையேனும் ஞானமுடையார்க்கும்’ என்கிறார், ‘ஊண்
  பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா’ என்கையாலே, ‘தனித்தனியும்’ என்கிறார்.
  ‘ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே’ என்றதனை நோக்கித் ‘திரளவும்’
  என்கிறார்.

2. ‘ஈசன் எம் கண்ணனைக் காண்பார் ஆர்?’ என்றதனால் பலித்த பொருளை ‘அவன்
  தானே காட்ட நான் கண்டது போன்று’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ’ஞானமுடையார்க்குக் காணத் தட்டு என்?’ என்னும் வினாவிற்கு விடையாக,
  ‘ஞானமுடையார் சிலர்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

4. முக்தாத்ம சொரூபத்தைக் கூறியது, நித்தியர்க்கும் உபலக்ஷணம்.

5. ‘ஏண்பால்’ என்பதற்கு இருபொருள் அருளிச்செய்கிறார்: எண்ணப்படுகின்ற அவ்விடங்கள்
  என்பது ஒன்று; எட்டுத் திக்குகள் என்பது மற்று ஒன்று.