பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

கற

மூன்றாந்திருவாய்மொழி - பா. 7

77

கற்கப்படுவதாய் உள்ள நூல் உண்டு - சாஸ்திரம்; அந்நூலிற்கூறிய முறைப்படியே நரம்பிலே தடவப்பட்டு, அதிலே பிறந்த பண்பட்ட ரசத்தினைப் போன்ற இனிமையினை உடையவனே! மிடற்றினின்றும் பிறக்கும் இசையானது காலத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு விகாரங்களை அடையுமாதலின், மிடற்று ஒசையினைக் கூறாது, ‘நரம்பின் முதிர் சுவையே’ என்கிறார். இனி, ‘முன்னல்’ என்பதனை ஒரு மொழியாகக் கொண்டு, அதற்கு ‘நினைத்தல்’ என்று பொருள் கூறி ‘நினைத்தலாவது, யாழோசையின் இனிமையாலே ‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருத்தல்’ என்று கூறலுமாம். இனி, ‘முன்னல்’ என்பதனை, முனல் என்ற சொல்லின் விகாரமாகவும், அந்த முனல் என்பதனை ‘முரல்’ என்ற சொல்லின் விகாரமாகவும் கொண்டு, முரல் என்பதற்கு ‘ஒலித்தல்’ என்று பொருள் கூறி, ஒலிக்கின்ற யாழ் என உரைப்பாரும் உளர்.

    இவ்வாறு இனிமை குறைவற்று இருந்தால் அவ்வினிமையினை நுகர்கின்றவர்கள் வேண்டும் அன்றே? அவர்களை அருளிச்செய்கிறார் மேல்: பன்னலார் பயிலும் பரனே- 1‘தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்’ என்கிறபடியே, தாம பலராய் இறைவனுடைய நற்குணங்கட்குத் தேசிகராய் இருக்கின்ற நித்தியசூரிகளால் அனுபவிக்கப்படுகின்றவனே! அயர்வு அறும் அமரர்கள் விடாது என்றும் நுகர்ந்தாலும் அதுகாறும் நுகர்ந்த பகுதி அளவுபட்டு, மேல் நுகரவேண்டிய பகுதிகளே மிக்கு இருப்பவன் ஆதலின், ‘பரனே’ என்கிறார். பவித்திரனே - பிறப்பிலே உழன்று திரிக்கின்றவர்களும், நித்திய சூரிகளைப் போன்று உன்னை அனுபவித்திற்குத் தக்கவர் ஆகும்படி அவர்கட்கும் சுத்தியைப் பிறப்பிக்குமவனே! இனி, ‘பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே’ என்பதனை ஒரே தொடராகக் கொண்டு, பன்னலார், -முமுக்ஷூக்கள்; ‘அவர்கள் எப்பொழுதும் அனுபவித்தாலும் தொலையாத இனிமையினையுடையையாய், அவர்கட்கும் உன்னை அனுபவித்தற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் சுத்தி யோகத்தையுடையவனே!’ என்று உரைத்தலும் ஆம்.

    கன்னலே - எனக்கு எல்லை அற்ற இனியன் ஆனவனே! அமுதே -2சாவாமல் என்னை உய்வித்துக்கொண்டு போகின்றவனே!

_____________________________________________________________

1. நாய்ச்சியார் திரு. 4: 1.

2. ‘சாவாமல்’ என்றது, ‘வாயுந் திரைஉகளும்’ என்ற திருவாய் மொழியில் கூறிய ‘பிரிவால்
  முடிந்து போகாதபடி பிழைப்பித்தவனே! என்றபடி.