பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

மூன்றாந்திருவாய்மொழி - பா. 8

79

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘என்னைக் குறிக்கொள்ளே’ என்றவாறே, அவன் குளிரக் கடா க்ஷித்தான்; அதனால் எல்லாத் துன்பங்களும் போய் அவனை அனுபவிக்கிறார்.

    குறிக்கொள் ஞானங்களால் -2இயமம் நியமம் முதலியவற்றிலே கருத்து ஊன்றியவர்களாய்க் கொண்டு சம்பாதிக்கவேண்டும் ஞான விசேஷங்களாலே. அவையாவன: 3கேட்டல் மனனம் உபாசனம்முதலிய நிலை விசேடங்கள். எனை ஊழி செய்தவமும் - பல கல்பங்கள் கூடிக் கேட்டலாய் மனனமாய்ப் பாவனையாய் இங்ஙனம் வரக்கூடிய தான தவத்தின் பயனை. கிறிக்கொண்டு -ஒரு முயற்சியும் இன்றியே இருப்பது ஒரு விரகைப் பெற்று. அதாவது, ‘அவன் தன்னையே கொண்டு’ என்றபடி. ‘ஆயின், ‘கிறி’ என்றால், இறைவனைக் காட்டுமோ?’ எனின், 4‘பெருங்கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே’ என்ற இடத்தில் இறைவனைக் ‘கிறியான்’ என்று ஓதியிருத்தல் காண்க. ‘இதுதான் எத்தனை பிறவிகள் கூடி?’ என்னில், இப்பிறப்பே - இந்தப் பிறிவியிலேயே. ‘இப்பிறவியின் வாழ்நாள்முழுதும் கூடியோ?’ என்னில், சில நாளில் - சில நாள்களிலே ‘அழகிது! நீர் அப்பேற்றினைப் பெறப் போகின்றவராய்

____________________________________________________________

1. ‘பிறவித் துயர் கடிந்து தவம் எய்தினன்’ என்ற பதங்களை நோக்கி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. இமயம் நியமம் முதலியவை எண்வகை யோக உறுப்புகள் எனப்படும். அவை,
  ‘ஆதனம், இயமம், நியமம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி’
  என்பன. இவற்றுள், இயமம் - கொல்லாமை, வாய்மை முதலியன. நியமம் - தத்துவ நூல்
  ஆராய்ச்சி, தெய்வ வழிபாடு முதலியன. ஆதனம் - இருப்பு அது ஸ்வஸ்திகம் முதலாக
  எண்வகைப்படும். பிராணாயாமம் - பிராணவாயுவை ரேசக பூரக கும்பகஞ்செய்தல்; இது
  ‘உயிர் நிலை, வளி நிலை’ எனப்படும். பிரத்தியாகாரம் - மன ஒருக்கம்; இது ‘தொகை
  நிலை’ எனவும் படும். அது உபாதியை நீக்கி உள் நோக்கல். தாரணை - கண்டம்,
  இதயம், நெற்றி, கபாலம், நாபி இவற்றுள் ஒன்றில் எப்பொழுதும் சிந்தையை வைத்தல்;
  இது, ‘பொறைநிலை’ எனவும்படும். சமாதி - இந்திரியம் முதலிய தத்துவங்களின்
  சேஷ்டைகளுக்கு ஏதுவாகிய உடம்பினுள் நின்று அவற்றோடு கூடினும் அவற்றில்
  பற்றின்றி இருக்கும் ஆத்துமாவாகிய தன்னைத்தான் காண்டல்.

3. இவற்றை, திருக்குறள் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் 5,6,7 - 1 ஆம்
  செய்யுள்களிலுங் அவற்றின் உரைகளிலும் கண்டுகொள்க.

4. திருவிருத்தம், 91.