பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
172

New Page 1

‘இவர்களுக்கு ஒன்றுஞ்செய்யப்பெற்றிலோம்’ என்று, பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன். தடங்கடல் சேர்ந்த பிரானை - இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி. திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ? 1‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள். 2இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது? கனியை - 3கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல். 4அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்; எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்; அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.

    கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை - கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும், எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை. கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்

_____________________________________________________

1. திருப்பாவை, 6.

2. ‘தவயோகம் பண்ணுகைக்கு அடி யாது?’ என்ன, ‘இவர்கள்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘கடல் சேர்ந்த’ என்றதன் பின் ‘கனியை’ என்றதற்கு ரசோக்தியாகப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘கடல் பழுத்த படி’ என்று தொடங்கி.

4. "சர்வரஸ:’ என்றது போன்று ஒருசேர ஒரு சொல்லால் கூறாது, ‘கனியைக்
  கரும்பின் இன் சாற்றை’ என்பன போலப் பிரித்து அருளிச்செய்வான் என்?’
  என்னும் வினாவிற்கு விடையாக, ‘அங்குச் சாய்ந்து கிடக்கிற’ என்று
  தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார். சர்வரஸ: - சுவைப்பொருள்
  எல்லாமாகவும் இருப்பவன்.