பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
218

286

286

        தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
            தானு மாய்அவை அல்லனாய்
        எஞ்சல் இல்அம ரர்கு லமுதல்
            மூவர் தம்முளும் ஆதியை
        அஞ்சி நீர்உல கத்துள் ளீர்கள்
            அவன்இ வன்என்று கூழேன்மின்;
        நெஞ்சி னால்நினைப் பான்எ வன்?அவன்
            ஆகும் நீள்கடல் வண்ணனே.

   
பொ-ரை : பற்றுக்கோடாயிருக்கின்ற தந்தையாய், தாயாய், தானுமாய், அல்லாத மற்றைப்பொருள்களுமாய், அனுபவத்தில் குறைவில்லாத நித்தியசூரிகள் கூட்டத்துக்குச் சத்து ஆதிகளுக்கு எல்லாம் காரணனாய், மூவருள்ளும் முதல்வனாய் இருக்கின்ற இறைவனை உலகத்திலுள்ளவர்களே! அவனுடைய மேன்மையைக் கண்டு பயந்து, அவனோ இவன் என்று ஐயப்படாதீர்கள்; நீங்கள் நெஞ்சினால் நினைக்கின்ற வடிவு யாதொன்று உண்டு? அவ்வடிவையே தனக்கு வடிவமாகக் கொண்டிருப்பான் நீண்ட கடல் போன்ற தன்மையையுடைய இறைவன்,’ என்கிறார்.

    வி-கு :
‘தஞ்சமாகிய தந்தை, தஞ்சமாகிய தாய், தஞ்சமாகிய தான்’ எனத் தனித்தனியே கூட்டுக. ‘தஞ்சமாகிய’ என்னும் இந்த அடை, இனம் விலக்க வந்தது. கூழ்ப்பு - ஐயப்படுதல்.

    ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘பரத்துவமே தொடங்கி அவதார சௌலப்யத்தளவும் வர உபதேசித்து, ‘பற்றுங்கோள்’ என்னாநின்றீர்; பரத்துவம் மனத்திற்கும் அப்பாற்பட்டது; அவதாரத்துக்குப் பிற்பாடர் ஆனோம்; நாங்கள் எங்கே பற்றுவது?’ என்ன, ‘நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப்பண்ண, அத்திருமேனியையே இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று விரும்பும் அர்ச்சாவதாரத்தைப் பற்றுமின்,’ என்கிறார். இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம்.

____________________________________________________ 

1. ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’
  என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.