பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
226

நாற்றம் குளிர்த்தி மென்மைகளை இயல்வாக உடையவன்’ என்பார், ‘அரவு’ என்றும், ‘இறைவனுடைய பரிச சுகத்தாலே விரிந்த படங்களை உடையவனாய் இருக்கிறான்’ என்பார், ‘பட அரவு’ என்றும், ‘ஆதிசேஷனுடைய பரிசம் இறைவனுக்கு மனக்கவர்ச்சியாய் இருக்கின்றது’ என்பார், ‘அரவின் அணைக்கிடந்த’ என்றும், ‘இவன்மேலே சாய்ந்ததனாலேயே இறைவன் சர்வாதிகனாய்த் தோன்றுகிறான்’ என்பார், ‘அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

    எனது ஆர் உயிர் - எனக்குத் தாரகம் முதலானவைகள் எல்லாம் தானே ஆனவன். பண்டு - முன்பு ஒரு நாளிலே. நூற்றுவர் அட வரும் படை மங்க - துர்வர்க்கமடையக் குடி கொண்ட துரியோதனாதிகளோடே கொல்ல வருகிற படை அழியும்படியாக. ‘சாரதீ! சாரதீ!’ என்று வாய் பாறிக்கொண்டே அன்றோ பையல்கள் வருவது? ஆதலின், ‘அட வரும் படை’ என்கிறது. 1’விபீஷணன் நான்கு அரக்கர்களோடு நம்மைக் கொல்லுதற்கு எதிர்முகமாய் வருகிறான்; சந்தேகம் இல்லை; பாருங்கள்!’ என்பது போன்று, அங்கே நலிய வருகிற இது, தம்மை முடிக்க வந்தது போன்று இருத்தலின், 2'சென்ற படை’ என்னாது, ‘வருபடை’ என்கிறார், ஐவர்கட்கு ஆகி - 3‘பாண்டவர்கள் கிருஷ்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கிருஷ்ணனையே பலமாக உடையவர்கள்; கிருஷ்ணனையே நாதனாக உடையவர்கள்,’ என்கிறபடியே, தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்காகி. வெஞ்சமத்து - போர்க்களத்திலே; ‘நாம் அடியார்க்கு எளியனாயிருத்தலை உலகமனைத்தும் காணவேண்டும்,’ என்று பார்த்து, 4‘அருச்சுனனை ரதியாகவும் தன்னைச் சாரதியாகவும் எல்லா உலகத்துள்ளவர்கள் கண்களுக்கும் இலக்காக்கினான்,’

____________________________________________________ 

1. ஸ்ரீராமா. யுத். 17 : 5.

2. ‘அவற்றுள்,

   தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
   தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.
  ‘ஏனை இரண்டும் ஏனை யிடத்த,’

(தொல். சொ. சூ. 29, 30.)

  என்ற இலக்கணத்தைத் திருவுளத்தே கொண்டு, ‘சென்ற படை’ என்னாது,
  வருபடை என்கிறார்,’ என்று அருளிச்செய்கிறார்.

3. பாரதம், துரோண பர். 183 : 24.

4. ஸ்ரீ கீதா பாஷ்யம்