பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
238

பெ

    பொ-ரை : செறிந்துள்ள பேரொளி மயமான சரீரத்தையுடையவனும், தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும், பயில்வதற்கு இனிய பாற்கடலிலே யோகநித்திரை செய்கின்ற நம் பரமனுமான எம்பெருமானைச் சேர்கின்ற பெரிய செல்வத்தை உடையவர்கள், எப்பிறவியை உடையவர்களாகிலும், அவர்கள் தாம், உண்டாகின்ற பிறவிதோறும் எம்மை அடிமை கொள்ளத் தக்க சுவாமிகள்.

    வி-கு :
‘பயில இனிய’ என்பது, பரமனுக்கு அடைமொழி. எவரேலும் - உம்மை இழிவு சிறப்பு. கண்டீர் - தெளிவின்கண் வந்தது. பின்னர் வருகின்றவைகளையும் இங்ஙனமே கொள்க. தோறு - இடைச்சொல்; இடப்பன்மையைக் காட்ட வந்தது.

    இத்திருவாய்மொழி, ஐஞ்சீர் அடியாய் வந்தமையின், கலி நிலைத்துறை.

    ஈடு :
முதற்பாட்டு. 1’வடிவழகிலும் குணங்களிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்று இத்திருவாய்மொழியிற் சொல்லப்படும் பொருளைச் சுருங்க அருளிச்செய்கிறார்.

    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை - 2எல்லை இல்லாத ஒளிப் பிழம்பையே வடிவாக உடையவனை. இதர விஷயங்களில் ஒளி கர்மம் காரணமாக வளருகையாலே வளருமாறு போன்று குறைந்து வரும்; இது அங்ஙனம் அன்றியே, என்றும் ஒக்கப்புகர் விஞ்சி வாராநிற்குமாதலின், ‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார். பயிலுகை - செறிகை. 3சுடர் என்றும், ஒளி என்றும் தேஜஸ்ஸாய் ‘மிக்க தேஜஸ்’ என்கை. அன்றியே, ஒளி - அழகுமாம். அன்றியே, 4‘பயிலும்’ என்பதனை ‘மூர்த்திக்கு’ 

____________________________________________________

1. பாசுரத்தின் முதலடியிலே வடிவழகும், இரண்டாமடியிலே குணங்களும்
  காணலாகும்.

2. ‘பயிலும்’ என்றதனை, முதலில் ஒளிக்கு அடைமொழியாக்கியும், பின்னர்,
  மூர்த்திக்கு அடைமொழியாக்கியும் இரு வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார்.

3. ‘சுடர் ஒளி’ என்பதனை, ஒரு பொருட்பன்மொழியாகக் கொண்டு ஒரு
  பொருளும், ‘சுடர்’ என்பதனை ‘ஒளி’ என்பதற்கு அடைமொழியாக்கி ஒரு
  பொருளும் அருளிச்செய்கிறார்.

4. ‘பயிலும் மூர்த்தி’ என்னுமிடத்துப் ‘பயிலும்’ என்ற நிகழ்காலச் சொல்லால்
  ‘என்றும் அழியாமல் இருக்கின்ற மூர்த்தி’ என நித்தியத்துவம் தோன்றுதல்
  காண்க.

  ‘முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
   செப்புவர் நிகழுங் காலத் தானே.’

(நன்னூல்)

  என்பது இலக்கணம்.