பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
282

மு

    முடியானேஎ - 1ஆதிராச்சியத்திற்கு அறிகுறியாய் உபய விபூதிக்கும் கவித்த முடியன்றோ? ஆதலால், அவன் இறைவனாந் தன்மைக்குப் பிரகாசகமான திருமுடியிலே முந்துறக் கண்வைக்கிறார். ‘ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின், அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி தலையான முடியே அன்றோ இது? உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது? 2இவர்க்கு இதில் ஓடுகிற விடாயின் மிகுதி, ‘முடியானேஎ!’ என்னும் இசையின் ஓசையிலே காணலாமித்தனை. புகும் முறைகள் எல்லாம் இல்லை இதில்: முதலிலே உயர்ந்த தானமாய் இருக்கும். 3மேல் திருவாய்மொழியில் ‘பொன் முடியன்’ என்றதுதான், முடியத் தொடர்ந்து வருகிறபடி. மூன்று உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானேஎ - குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லா உலகங்கட்கும் புகலிடமான

____________________________________________________

1. முதலில் முடியைச் சொல்லுவான் என்?’ என்னும் வினாவிற்கு விடையாக,
  ‘ஆதிராச்சியத்திற்கு அறிகுறியாய்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
  ‘பொய்ம்முடியாக்கும்’ என்பதற்கு ‘அசத்துக்குச் சமமாக்கும்’ என்பது
  நேர்ப் பொருள்; ‘சப்பரையான முடி’ என்பது தொனிப்பொருள். ‘தலையான
  முடி’ என்பதற்கு, ‘தலையிலே இருக்கிற முடி’ என்பது நேர்ப்பொருள்;
  ‘உயர்ந்த முடி என்பது’ தொனிப்பொருள். ‘ஒரு முடியிலே’ என்பதற்கு,
  ‘ஒப்பற்ற திருமுடியிலே’ என்பது நேர்ப்பொருள்; ‘ஒரு முடிச்சிலே’ என்பது
  தொனிப்பொருள். தலைமையான முடி என்பதனைக் காட்டுகிறார், ‘உபய
  விபூதிகளும்’ என்று தொடங்கி.

  ‘கதிராரு நீண்முடி சேர்ந்தகைப் போதுஎக் கடவுளர்க்கும்
  அதிராசன் ஆனமை காண்மின்என் றேசொல்லும்; ஆயபொன்மா
  மதிலார் அரங்கர்பொற் றாளார் திருக்கர மற்றிதுவே
  சதுரா னன்முதல் எல்லா உயிர்க்கும் சரண்என்னுமே,’

  என்ற (திருவரங்கத்து மாலை) பாசுரப்பொருளும் ஈண்டு நோக்கலாகும்.

2. ‘முடியானேஎ’ என்னும் அளபெடை, ஆர்த்திக்கு அறிகுறியாய் இருக்கிறது
  என்று கொண்டு அருளிச்செய்கிறார், ‘இவர்க்கு இதில்’ என்று தொடங்கி,
  இசையின் ஓசை - அளபெடை. ‘குறில் நெடில் அளபெடை என்ற
  முறையில் வர வேண்டாவோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘புகும் முறைகள்’ என்று தொடங்கி. உயர்ந்த தானம் - அளபெடையாலாய
  உச்ச ஸ்வரம்.

3. இத்திருவாய்மொழியின் முன்னுரையில் பாகவதர்களுடைய சொரூபத்தை
  நிரூபகம் செய்யும் முகத்தால் தோன்றிய இறைவனுடைய அவயவ
  சௌந்தரியங்கள் விடாய் மிகுதற்குக் காரணங்களாயின என்று
  அருளிச்செய்ததனை மூதலிக்கிறார், ‘மேல் திருவாய்மொழியில்’ என்று
  தொடங்கி. இப்பாசுர வியாக்கியானத்தில் மேலே மூதலிக்கிற
  வாக்கியங்களுக்கும் இப்படியே சங்கதி கண்டுகொள்வது. ‘பொன் முடியன்’
  என்பது, திருவாய். 3. 7 : 4.