பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
288

என

என் கைகள் வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர்தம் நாயகனே என்னும் - கைகளானவை ‘இவ்வாக்கே ஏத்திப் போமித்தனையேயோ! நானும் ஒருகால் ஏத்தினால் ஆகாதோ!’ என்னாநின்றது. 1‘துதித்துக்கொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, ‘நித்தியசூரிகள்-ஏத்த இருக்கிற உனக்கு, வாக்கு ஏதேனும் பச்சையிட்டது உண்டோ?’ என்கிறார். என்றது, ‘யாதொரு விருப்பமும் இல்லாதவனாய் இருக்கச்செய்தே அன்றோ வாக்குக்கு ஏத்தலாம்படி விருப்பத்தை உடையவன் ஆயிற்று? அந்த விருப்பம் இல்லாத் தன்மை என் பக்கலிலே ஆயிற்றோ?’ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, ‘வாசகம் ஏத்தவே அருள் செய்யும்’ என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி, ‘நித்தியசூரிகளைப் போலே வாக்கிற்கு உன்னை ஏத்துகையே இயற்கை என்னும்படி கொடுத்தவனே!’ என்னுதல்.

    நாள் இளந்திங்களைக் கோள் விடுத்து - 2‘படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய்’ களவு காணப்புக்க இடத்திலே, உறிகளிலே சேமித்து வைத்திருப்பார்கள் அன்றோ? ‘தன் நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே, கையிலே வெண்ணெய்த் தாழிகள் தட்டின அளவிலே பிரியத்தாலே நகைத்தலைச் செய்வான்; அவ்வாறு நகைத்தலைச் செய்யுமதுவே கை விளக்காக அமுது செய்வான்,’ என்றபடி. ‘அமுது செய்யும் போது எவரேனும் வருவார் உளராயின், என்செய்வது?’ எனின், ஆள் தட்டிற்றாகில் வாயை மூட அமையுங்காணும்; ஆள் தட்டு கைதான் தனக்கு விருப்பம் இல்லாத செய்கை ஆகையாலே நகைத்தல் மாறுமே அன்றோ? ‘நன்று; ஸ்ரீகௌஸ்துபம் உண்டே?’ எனின், ஸ்ரீகௌஸ்துபத்தைக் கையாலே புதைக்க அமையும். 3புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது; 4‘செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போல், நக்க செந்துவர்வாய்த் திண்ணைமீதே நளிர் வெண்பல் முளை இலக’ என்றார் பட்டர்பிரான். திங்கள் போல் என்னாது, ‘திங்கள்’ என்றது,

____________________________________________________

1. இருக்கு வேதம்

2. பெரிய திருமொழி, 4. 4 : 3.

3. ‘புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது’ என்பது, ‘நாள்
  இளந்திங்கள்’ என்றதன் பொருள்.

4. பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 2.