|
New Page 1
‘தனக்கு என்று ஒன்று உண்டாய்க்
கொடுப்பது கொள்ளுவது ஆதல் சேருமோ சொரூபத்துக்கு?’ என்னில், 1அடியிலே இறைவன்,
நினைந்து அறியும் ஆற்றலையும் தொழில் செய்தல் செய்யாமைக்குரிய சத்தியையும் கொடுத்து வைத்தால்,
பின்னர் ‘நான் கொடுத்தேன்’ என்னலாம் அன்றோ? 2இறைவனுடைய பொருளை ‘நான் என்
பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது? கோதானத்திலே பிதா புத்திரன்
கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான் பெற்றானாய்
இருக்குமாறு போன்று, இவனும் தனக்கே உரித்தான செல்வத்தைத் தந்தானாய், இவன் சர்வஸ்வதானம்
பண்ணத் தான் பெற்றானாக நினைத்திருக்கும் இறைவனுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.
3‘என்னால்
தன்னை இன் தமிழ் பாடிய’ என்கிறபடியே, தான் இவரையிட்டுப் பாடுவித்து, இவர் தன்னைப்
பாடினாராக நினைத்திருக்குமவன் அன்றோ இறைவன்? ‘நன்று; ‘யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’
என்கைக்குக் காரணந்தான் என்?’ என்னில், ‘அல்லாதார் புறம்பு உள்ளார்க்குத் தங்கள் கவியைக்
கொடுத்து வைக்கையாலே, யான் ஒருவர்க்கும் கொடுக்க மாட்டேன்,’ என்கிறார். ஆக, ‘இதனால்,
வழி கெடப் போகிற நீங்கள், ஒருவன் வழியே போகாநின்றால் ‘நாமும் அப்படியே போகவேண்டும்’
என்று இருக்க வேண்டாவோ மக்கட் பண்பு இருந்தால்? நான் இருக்கிறபடி கண்டீர்களே அன்றோ? அப்படியே
அன்றோ உங்களுக்கும் இருக்க அடுப்பது?’ என்கிறார் என்றபடி.
____________________________________________________
1. ‘அடியிலே’ என்று
தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து ஈசுவரன்
ஆத்துமாவுக்கு அறியத் தக்க சத்தியைக் கொடுக்கையாலே
‘நான்
கொடுத்தேன்’ என்று கூறுதல் தவறு அன்று என்பது.
2. ‘ஆனாலும், பகவானுடையது
அன்றோ? அங்ஙனம் கூறுதல் ஒண்ணுமோ?’
எனின், அதற்கு விடையாக ‘இறைவனுடைய’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். இதற்கு உதாரணம் காட்டுகிறார், ‘கோதானத்திலே’
என்று தொடங்கி. ‘தமப்பனுடைய
செல்வத்தைம் புத்திரன் ‘என்னது’ என்று
கூறலாம்,’ என்பது கருத்து.
3. ‘இறைவனுடைய நினைவு
அங்ஙனம் இருக்குமோ?’ எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘என்னால் தன்னை’ என்று தொடங்கி.
இது,
திருவாய்.
7. 9 : 1.
|