பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
11

New Page 1

    பொ-ரை : ‘திறைப்பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின்’ என்று கூறி, உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழே ஆண்ட சக்கரவர்த்திகள் இன்பத்தை அளிக்கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு, கொடிய மின் ஒளி பரக்கின்ற காட்டிற்குச் சென்று, அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப்படுவார்கள்; ஆகையாலே, ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைந்து சேர்மின்,’ என்றவாறு.

    வி-கு : ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என மாறுக. திறை - கப்பம். தம்மின்  - தம்முடைய. இனி, தம் இன் என்பதில் ‘இன்’ என்பதனைச் சுவைக்கு அடையாக்கலுமாம். குமைதின்பர் - நலியப்படுவர். ‘திருமாலை அடி விரைந்து சேர்மின்,’ எனக் கூட்டுக. திருமாலை உருபு மயக்கம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1இராச்சியத்தை இழத்தலே அன்றிக்கே, இராச்சியம் பண்ணுகிற காலத்தில் மணஞ்செய்துகொள்ளப்பட்ட இன்சுவை மடவார்களையும் பகைவர்களுக்குக் கொடுத்து எளிமைப்படுவர் என்கிறார்.

    ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என்று உலகு ஆண்டவர் 2பகைவர்களுடைய இராச்சியத்தைத் தனக்கு ஆக்கக் கோலினால் போர்செய்து ஆக்கிக்கொள்ளுகை அன்றிக்கே, ‘நீ உன் பிராணனை நோக்கிக்கொள்ள வேண்டியிருந்தாயாகில், உன் செல்வம் அனைத்தையும் நம் பக்கலிலே கொண்டுவந்து தந்து, உன்னைக்கொண்டு பிழைத்து ஓடிப் போ’, என்கிற வார்த்தையாலே ஆயிற்றுத் தனக்கு ஆக்குவது; என்றது, ‘படையும் குதிரையும் கொண்டு போர் செய்து தனக்கு ஆக்கிக்கொள்ள வேண்டா; திறையைக் கொண்டு வந்து கொடுத்து உயிர் பிழைத்துச் செல்லுங்கோள்’ என்கிற சொல்லாலே உலகத்தை ஆண்டவர்கள் என்றபடி. இம்மையே - இப்படி அரசு ஆண்ட இந்தப் பிறவியிலேயே. தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ள - தத்தமக்கு எல்லையில்லாத இனிய பொருள்களான பெண்களைப் பகைவர்கள் கொள்ளும்படியாக; என்றது, ‘தான் அரசு ஆளுங்காலத்தில் அந்தத் தேசத்திலே

_____________________________________________________

1. ‘தம்மின் சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு’ என்பதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘என்று’ என்பதிலே நோக்காக, பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘பகைவர்களுடைய’ என்று தொடங்கி.