பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
182

New Page 1

என்றாராம். எல்லா உலகும் உடையான்தன்னை - 1‘உலகங்களினுடைய தோற்றமும் பிரளயமும் கிருஷ்ணனிடத்திலே; இது பிரசித்தம்; சராசரங்களாகிற இந்தப் பிராணி வர்க்கம் எல்லாம் கிருஷ்ணன் நிமித்தமாகவே இருக்கின்றன. இது பிரசித்தம்,’ என்கிறபடியே, எல்லா உலகங்கட்கும் ஈசுவரனான கிருஷ்ணனை. ‘இப்படி எல்லாவற்றையுமுடைய செருக்காலே உடைமை நோவுபடவிட்டுப் பார்த்துக்கொண்டு இருப்பானோ?’ என்னில், ‘அங்ஙனம் இரான்,’ என்கிறார் மேல் :

    குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை - இந்திரன் பசிக்கோவத்தாலே பசுக்களும் ஆயர்களும் தொலையும்படி மழை பெய்த போது, தோன்றியது ஒருமலையை எடுத்து, அந்த ஆபத்தினின்றும் காத்த உபகாரகனை. 2‘தீ மழை’ அன்றோ? சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் - சொன்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்கியத்தை அடையப்பெற்றோம். 3பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை மாத்திரமே உள்ளது, அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன? ‘இப்படி விஷயம் நிறைவுற்றிருந்தால் ‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே, இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும் என்கிறார். 4இவர் இப்போது ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், ‘விதி’ என்கிறார். ‘விதி சூழ்ந்ததால்’ என்றாரேயன்றோ

_____________________________________________________

1. மஹாபாரதம் வீடும பருவம்.

2. ஆபத்தின் கனத்தை விளக்குகிறார், ‘தீ மழை அன்றோ?’ என்று. இது,
  திருவாய்.  7. 4 : 10.

3. ‘நன்று’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பரத்துவத்தில்’ என்று
  தொடங்கி. ‘மழை காத்த பிரான்’ என்று ஆபத்திற்குத் துணையாதல் முதலிய
  குணங்களைச் சொல்லுகையாலே, ‘அவதரித்தவிடத்தேயன்றோ அவை
  பிரகாசிப்பன?’ என்கிறார்.

4. ‘வேறு ஓர் உபாயத்தையறியாத இவர்க்கு ஒரு புண்ணிய விசேடமுண்டோ?
  ‘விதி எய்தினம்’ என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இவர் இப்போது’ என்று தொடங்கி. பகவானுடைய கிருபையை ‘விதி’
  என்றதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தமக்கு’ என்று தொடங்கி.
  அதற்குப் பிரயோகம் காட்டுகிறார், ‘விதி சூழ்ந்ததால்’ என்று. இது திருவாய்.
  2. 7 : 6.