பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
185

இன

இனிமையையும் உடையவளாதலின், ‘பூவின் மிசை நங்கை’ என்கிறது. 1‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப்போலேயாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார். இன்பனை -2இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.

    3இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே, ‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது பெருமாள் அவரைப் பார்த்து, 4‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது, ‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி. 5‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ? கிடைப்பது கிடையாதொழிவது இச்சியாநின்றார். 6‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னாநின்றதே அன்றோ?

_____________________________________________________

1. ‘நமக்கும்’ என்றதற்கு அருளிச்செய்த பொருள்களில் இரண்டாவது பொருளை
  இங்கே நினைவுகூர்தல் தகும். ‘இத்தலை’ என்றது, ஆழ்வாரை. நங்கை -
  எல்லா நற்குணங்களும் நிறைந்தவள்.

2. ‘நமக்கும்’ எனத் தம்மை முற்படச் சொன்னதற்கு பாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘இன்பனாமிடத்தில்’ என்று தொடங்கி.

3. மேலே அருளிச்செய்த பாவத்திற்குப் பிரமாணம் காட்டுவதற்குத் திருவுள்ளம்
  பற்றி அப்பிரமாணத்திற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இலங்கையிலே’
  என்று தொடங்கி.

4. ஸ்ரீராமபிரான், சுக்கிரீவனைத் தமக்கு அரசனாக நினைத்திருந்தார்
  என்பதற்குப் பிரமாணங்காட்டுகிறார், ‘இராஜாக்கள்’ என்று தொடங்கி. இது,
  ஸ்ரீராமா. யுத.் 41 : 2. இதனால், ‘பரிகரங்களில் ஒருவனான நான் நிற்க,
  என்னை ஏவிக் காரியமாகாவிடிலன்றோ நீர் மேல் விழ வேண்டுவது?’
  என்கிறார் என்றபடி.

5. மேலே கூறியதற்கே மற்றும் ஒரு பிரமாணம் காட்டுகிறார், ‘ஸ்ரீராமபிரான்’
  என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. கிஷ்.  4 : 18. ‘இச்சதி’ என்றதற்கு
  பாவம் அருளிச்செய்கிறார், ‘கிடைப்பது கிடையாதொழிவது இச்சியாநின்றார்,’
  என்று.

6. அதற்கே மற்றும் ஒரு பிரமாணம் காட்டுகிறார், ‘அத்தகைய இந்த
  ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 20.